எதிர்க்கட்சிகள் பின்பற்றும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், சாதிகளை திருப்திப்படுத்தும் அரசியலை ஒழிக்க பாஜக வலியுறுத்தினாலும், இந்துக்கள் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடமும் செல்லுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கட்சியை ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டி பாஜகவைச் சேர்ந்த ஒருவர், “மற்ற சமூகங்களிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டௌ பிரிவு மக்கள் இருப்பதாக அவர் கூறினார். நாம் இந்துக்களுக்கு மட்டும் வரையறுத்துக்கொள்ளாமல் அனைத்து தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்காகவும் பாடுபட வேண்டும்.” என்று கூறினார்.
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடியின் இந்த வழிகாட்டுதல், உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகித்த இரண்டு தொகுதிகளான அசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு வந்துள்ளது. . சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கும் பாஸ்மாண்டா முஸ்லிம்கள் போன்ற சமூகங்களைச் சென்றடையும் வகையில் பிரதமரின் கருத்து கட்சிக்கான செய்தி என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
“கடந்த காலத்திலும், பாஜக அந்த சமூகத்தை சென்றடைய முயற்சிகளை மேற்கொண்டது. மேலும், சமீபத்திய இடைத்தேர்தலில் அந்த சமூகத்தின் வாக்குகள் பாஜகவை ஆதரித்ததாக கட்சி மதிப்பிட்டுள்ளது” என்று மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர் ஒருவர் கூறினார். மே மாதம் உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தில் பாஸ்மாண்டா சமூகத் தலைவர் டேனிஷ் ஆசாத்தை பாஜக சேர்த்தது.
கணிசமான முன்னிலை பெற முடியாத அல்லது தேர்தல் பலன்களைப் பெற முடியாத பகுதியினரை பாஜக கவனித்து வருவதால், கட்சிக்கு பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு அறிக்கையில், இந்துக்கள் அல்லாத பிற சமூகங்களின் இதயங்களைத் தொடவும் வெற்றிபெறவும் பாஜகவின் பொதுச் செயலாளர்களை மோடி வலியுறுத்தினார். கேரளாவில் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை பாஜக தனது பக்கம் வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
அரசியல் தீர்மானம் மீதான விவாதத்தின் போது மோடி ஏதேனும் ஆலோசனைகளை வழங்கினாரா என்று கேட்டதற்கு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “பிரதமர் விவாதத்தின் போது பல்வேறு கருத்துக்களைப் பேசினார். வடகிழக்கு பகுதியில் வளர்ச்சியைக் கொண்டுவர ஆலோசனைகளை வழங்கினார். நமது குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பற்றிய செய்தியை பாஜக தொண்டர்கள் எப்படி அடிமட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் பேசினார் – அவரது எளிமை மற்றும் அடக்கமான பின்னணி பற்றிய செய்தி, அவரது போராட்டக் கதையுடன் இணைந்து மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். கலந்துரையாடலின் பல்வேறு கட்டங்களில் அவர் ஆலோசனைகளை வழங்கினார்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“