இப்படி ஒரு ஹோட்டல் நம்முடைய ஊர்களில் இருக்காதா என ஏக்கத்தை வரவழைக்கும் அளவிற்கு குஜராத்தில் ஒரு ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. பெரிதாக ஹோட்டலில் என்ன இருந்து விட போகிறது என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். ஆனால் இந்த ஹோட்டலில் சாப்பிட நீங்கள் பணம் தர தேவையில்லை, பிளாஸ்டிக்கை கொடுத்தால் போதும்.
என்னது பிளாஸ்டிக்கா என நீங்கள் வியப்பது தெரிகிறது. குஜராத் மாநிலம், ஜூனாகத் மாவட்டத்தில் சர்வோதய் சகி மண்டல் என்பவரால் புதுவித ஒன்று ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பெண்கள் குழுவின் உதவியால் இந்த ஹோட்டல் இயங்கி வருகிறது.
ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி முதல், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த முன்னெடுப்புக்கு உதவிடும் வகையில், இந்த ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.
அதாவது உணவுக்காக வருபவர்கள் பிளாஸ்டிக் கொண்டு வந்து கொடுத்தால் போதும், பிளாஸ்டிக்கின் எடையை கணக்கிட்டு அதற்கேற்றாற் போல அவர்களுக்கு உணவு வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் உணவுகளும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டவையே.
இது குறித்து இம்மாவட்டத்தின் கலெக்டர் ரஷீத் ராஜ் தெரிவிக்கையில், “தங்களுடைய பகுதி சுத்தமாகவும், பசுமையாகவும் இருப்பதை ஊக்குவிக்க இவ்வாறு செய்கிறார்கள். இந்த ஹோட்டலுக்கு 500 கிராம் பிளாஸ்டிக் கொண்டு சென்றால் ஒரு எலுமிச்சை ஜூஸ் கிடைக்கும். ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு தட்டு நிறைய டோக்ளா அல்லது போஹா சிற்றுண்டி கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
ஹோட்டலின் கூடுதல் சிறப்பே வெற்றிலை, ரோஜா, அத்தி, பேரிக்காய் போன்றவற்றால் செய்யப்பட்ட உணவுகள் மண்பாண்டங்களில் வழங்கப்படுகிறது. இந்த புதுவித ஹோட்டலுக்கு மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.