ஆசிய கண்டத்தில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க அமெரிக்கா திட்டமிடுவதாக வடகொரியா விமர்சித்துள்ளது.
கடந்த வாரம் நடந்த நேட்டோ படைகள் கூட்டமைப்பில் கொரிய பிராந்தியத்தில் வடகொரியாவை எதிர்கொள்வதற்கான ராணுவ தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான் , தென் கொரியா போன்ற நாடுகள் ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில் இதனை வடகொரியா கடுமையாக எதிர்த்துள்ளது
இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சம் கூறும்போது, ‘‘வடகொரியாவை அமெரிக்கா அச்சுறுத்தலாக பார்க்கும் பொய்யான காரணம் தெரிந்துவிட்டது, ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் நேட்டோ போன்ற ராணுவ படையை ஏற்படுத்தி அமெரிக்கா தனது ராணுவ வலிமையை அதிகரிக்க விரும்புகிறது. இதன் காரணமாகவே வடகொரியாவை அமெரிக்கா அச்சுறுத்தலாக பார்க்கிறது.
தற்போதைய சூழலில், கொரிய பிராந்தியத்தில் பாதுகாப்பு மோசமடைவதைத் தீவிரமாகச் சமாளிக்க, எங்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த அவசரமாக செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவும் ஏவுகணை சோதனையும்: வடகொரியா கடந்த ஜனவரி மாதம் ஏவுகணை பரிசோதனை ஒன்றைச் செய்தது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது. வடகொரியாவின் அச்சமூட்டும் செயல்பாடுகள் கவலையை அளித்திருப்பதாக அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.
கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா. கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.