ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரயைில் பங்கேற்க முடியாதவர்களின் வசதிக்காக ஆன்லைனில் பூஜை மற்றும் யாகம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் பனிலிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்தாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், புனித யாத்திரையில் பங்கேற்க முடியாதவர்களின் வசதிக்காக அமர்நாத் பனி லிங்க தரிசனம், பூஜை ஆகியவற்றில் ஆன்லைன் வழியாக பக்தர்கள் பங்கேற்க, கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பனி லிங்கத்துக்கான பூஜை செய்யவும், பிரசாதம் பெறவும் பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். ஆன்லைன் பூஜைக்கு ரூ.1,100, கோயில் பிரசாதத்துக்கு (அமர்நாத்ஜி உருவம் பொறித்த 5 கிராம் வெள்ளி நாணயம்) ரூ.1,100, சிறப்பு பிரசாதம் ரூ.2,100 (10 கிராம் வெள்ளி நாணயம்), மற்றும் சிறப்பு யாகத்துக்கு ரூ.5,100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்களின் பெயரில் கோயில் அர்ச்சகர் பனி லிங்கத்துக்கு அர்ச்சனை செய்வார். இந்த பக்தர்களின் வீட்டுக்கு தபால் மூலமாக பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.4 நாளில் 5 பக்தர்கள் பலி 40 ஆயிரம் பேர் தரிசனம்அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது. நேற்று காலை வரை 40 ஆயிரத்து 233 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். புனித யாத்திரையில் பங்கேற்ற 5 பேர் இறந்துள்ளனர். ஒருவரை காணவில்லை. அவரை பாதுகாப்பு படைகள் தேடி வருகின்றனர்.