கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டினார்; தேவேகவுடாவை சந்திக்க மறுப்பு

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதி முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்க இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல்

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடி இன தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு (வயது 64) போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி மந்திரியான யஷ்வந்த் சின்கா (84) களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டினார்

இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான யஷ்வந்த் சின்கா ஆகியோர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா, நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்தார்.

நேற்று அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே. சிவக்குமார், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன்பின்னர் யஷ்வந்த் சின்கா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகம் மீது பற்று

எனது தேர்தல் பிரசாரத்தின் 5-வது நாளில் கர்நாடகத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்து, அவர்களிடம் ஆதரவு கோரியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகம் வளமான, ஆன்மிகம், கலாசார மற்றும் அறிவுசார் பாரம்பரியம் கொண்ட மாநிலம் ஆகும். சுதந்திரத்திற்காக நாம் நடத்திய போராட்டத்திற்கு கர்நாடகத்தின் பங்களிப்பு அதிகம்.

இதனால் கர்நாடகம் மீது மிகுந்த பற்று கொண்டு உள்ளேன். சாதியற்ற சமுதாயத்திற்கான பணியை தொடங்கி 12-ம் நூற்றாண்டில் ஜனநாயக நாடாளுமன்றத்தை நிறுவிய ஜகத்குரு, பசவேஸ்வராவின் பூமி இது. கனகதாசர் போன்ற சிறந்த இலக்கியவாதிகளை இந்தியாவுக்கு கர்நாடகம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நீதித்துறை மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரமணா கூறி இருப்பதை நாளிதழ்களில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

தேவேகவுடாவை சந்திக்க மாட்டேன்

இந்த கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிப்பதோடு, அவரது தெளிவான கருத்தை நான் வரவேற்கிறேன். முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்து உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு பற்றி சமூக வலைத்தளங்களில் மோசமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இது இந்திய ஜனநாயகத்தின் மிகவும் வருத்தமான வளர்ச்சி. நாங்கள் அனைவரும் நீதித்துறையை உயர்வாக மதித்து வருகிறோம். ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பா.ஜனதாவினர் கொண்டாடினர்.

ஆனால் அதே சுப்ரீம் கோர்ட்டு தவறுகளை சுட்டிக்காட்டினால் நீதித்துறைக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள். நான் எனக்கு ஆதரவு வழங்கும்படி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவை சந்தித்து கேட்க போவது இல்லை. எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளில் இருந்து யாரேனும் ஒருவர் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை மத்திய அரசு முடக்க தான் பாா்க்கிறது. சமீபத்தில் மராட்டியத்திலும், அதற்கு முன்பு கர்நாடகம், கோவா, மத்தியபிரதேசம், அருணாசல பிரதேசம் மாநிலங்களில் நடந்து வந்த ஆட்சியை பா.ஜனதாவினர் கவிழ்த்தனர். இது ஜனநாயகமா?.

ஜனநாயக விரோத செயல்களுக்கு…

மத்திய அரசு பண பலம், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கட்சிகளை உடைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை வீழ்த்தி ஜனநாயகத்தை அவமதித்து வருகிறது. பள்ளி பாடப்புத்தகங்களில் மத சாயத்தை பூசி இளம் தலைமுறையினரை வகுப்புவாதத்திற்கு கர்நாடக அரசு தள்ளி வருகிறது. இதனை நான் கண்டிக்கிறேன். நான் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டால் அரசியலமைப்புக்கு முழு பாதுகாவலனாக இருப்பேன் என்று உறுதி அளித்து உள்ளேன். எனது அதிகாரத்தை எந்த பயமும் இல்லாமல், மனசாட்சியுடன் செயல்படுத்துவேன். இத்தகைய உறுதியை திரவுபதி முர்முவும் அளிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புக்கு பாரபட்சமற்ற ஒரு ஜனாதிபதி தேவை என்பதை நான் அறிவேன். ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியாக நான் இருக்க மாட்டேன் என்று திரவுபதி முர்மு உறுதி அளிக்க வேண்டும். ஆபரேஷன் கமலா போன்ற மூர்க்கத்தனமான மத்திய அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு துணை போக மாட்டேன் என்றும், வகுப்புவாத பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்றும் திரவுபதி முர்மு உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டு கொள்கிறேன். மேலும் பத்திரிகை சுதந்திரம், பேச்சு உரிமை மற்றும் பிற சுதந்திரங்களை பாதுகாப்பேன் என்றும், தேச துரோக சட்டங்களை திரும்ப பெற பாடுபடுவேன் என்றும் திரவுபதி முர்மு உறுதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சந்திக்கவில்லை

ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அக்கட்சி தலைவர்களான தேவேகவுடா, குமாரசாமி உள்ளிட்டோரை யஷ்வந்த் சின்கா தனக்கு ஆதரவு கேட்டு சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.