ஹைதராபாத்: இந்துக்கள் மட்டுமன்றி அனைத்துசமுதாய மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். வாக்குவங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை அளிப்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் 18 மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட 348 பேர் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளான நேற்று காலை 9 மணிக்கு செயற்குழு கூட்டம் தொடங்கியது. அப்போது அரசியல் தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. தெலங்கானாவில் வரும் 2024-ம் ஆண்டில் ஆட்சியைகைப்பற்றுவது குறித்த 7 பக்கதீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுதவிர, கர்நாடகா, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றதீர்மானமும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்துக்கள் மட்டுமன்றி அனைத்து சமுதாய மக்களையும்அரவணைத்து செல்ல வேண்டும்.அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். குறிப்பாக, இதரசமுதாயத்தில் பின்தங்கிய, நலிவுற்ற மக்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்
உத்தர பிரதேசத்தின் ஆசம்கர், ராம்பூரில் அண்மையில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவெற்றி பெற்றது. அந்த தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக, பாஸ்மந்தா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
பொருளாதார ரீதியாக அவர்கள்பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் நலனில், முன்னேற்றத்தில் நாம் அதிக அக்கறைசெலுத்த வேண்டும். இதன்காரணமாகவே பாஸ்மந்தா முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த டேஷிஷ் ஆசாத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெறச் செய்தோம்.
இதேபோன்று கேரளாவில் பாஜகவுக்கு மேலும் பலம் தேவை. அந்த மாநிலத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்களின் நலனுக்காகவும் நாம் போராட வேண்டும். கேரள மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும், போராட வேண்டும்.
கிழக்கிலும், வடக்கிலும் பாஜக பலமாக உள்ளது. இதேபோன்று மேற்கிலும், தெற்கிலும் கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணை குடியரசுத் தலைவராக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. நமது குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவரின் கடின உழைப்பு, எளிமை, நேர்மை குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
ஒரே பாரதம், வளமான பாரதம் என்ற கொள்கையை சர்தார் படேல் முன்மொழிந்தார். அவரது கொள்கையை நாம் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வாக்குவங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை அளிப்போம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
செயற்குழு கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறும்போது, “தெலங்கானா அரசியல் குறித்து தனியாக விவாதித்தோம். குடும்ப அரசியல், மாநிலத்தில் நடக்கும் அராஜகங்கள் குறித்தும் பேசப்பட்டது. தெலங்கானாவில் நடக்கும் குடும்ப அரசியல் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்” என்றார்.
ராஜஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட கன்னையா லால், பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலா ஆகியோருக்கு பாஜக செயற்குழுகூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.