கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.எம். கட்சி, முதல்முறையாக 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இது மிகப்பெரிய வெற்றியாக அப்போது பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஏ.ஐ.எம்.எம். கட்சியில் மொத்தமுள்ள 5 எம்.எல்.ஏக்களில் 4 எம்.எல்.ஏக்கள், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்திருக்கின்றனர். இதனால், பீகார் சட்டமன்றத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 76-லிருந்து 80-ஆக உயர்ந்து தனிப்பெரும் கட்சியாக உருவாகியிருக்கிறது.
இதற்கான காரணம் என்ன? மிக இளம் தலைவராக இருந்துகொண்டு பீகாரில் தவிர்க்க முடியாத சக்தியாக தேஜஸ்வி யாதவ் உருவெடுத்தது எப்படி?
தேஜஸ்வி யாதவ் – கிரிக்கெட் பவுலர் டூ அரசியல் ஆல்ரவுண்டர்:
கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தால் தனது பதினான்காம் வயதிலேயே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார் தேஜஸ்வி. அதன்பிறகு கிரிக்கெட் விளையாடுவதையே முழு நேரமாகக்கொண்டிருந்த தேஜஸ்வி வயது அதிகரிக்க அதிகரிக்க, உள்நாட்டு டி-20, முதல் தர போட்டி, 2-ஏ பிரிவு போட்டிகள் என கிரிக்கெட் போட்டிகளிலும் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறினார். அதைத்தொடர்ந்து, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஒருமுறை கூட களத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுக்கும் பணியையே செய்துவந்தார். அந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக, தனது தந்தை லாலு பிரசாத் யாதவின் வழிகாட்டுதலில் அவரின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து, நேரடி அரசியலுக்குள் நுழைந்தார்.
அதைத்தொடர்ந்து, 2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், ராகோபூர் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட தேஜஸ்வி, முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். அந்தத்தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியமைத்து போட்டியிட்டு பெருவாரியான வெற்றியைப் பெற்றது. பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க, 26 வயதேயான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ஆட்சிக் கவிழ்ப்பு, பதவி இழப்பு:
ஆனால், கருத்துவேறுபாடுகளால் இரண்டே ஆண்டுகளில் (2015-2017) இந்தக் கூட்டணி உடைந்தது. நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைமுதல்வர் பதவி தேஜஸ்வி யாதவை விட்டு கை நழுவிப்போனது. அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். பா.ஜ.க-வின் சுஷில் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். ராஷ்டிரிய ஜனதா தளம் தனித்து விடப்பட்டது.
அதேசமயம், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 41 மாதங்கள் சிறை, வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் லாலு பிரசாத்துக்கு தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் போனது. அந்த சூழ்நிலையில், கட்சியை நிர்வகிக்கும் முழு பொறுப்பும் தேஜஸ்வி முன்பு இருந்தது. கட்சியில் முக்கியமான முடிவுகளையும் தேஜஸ்வி யாதவே எடுத்து வந்தார். ஆனால், மிகவும் இளையவரான அவரின் தலைமையை ஏற்காத பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டே வெளியேறினர். இருந்தபோதும், பல புதிய முகங்களுக்கு, கட்சியில் பல முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்த தேஜஸ்வி இளைஞர் பட்டாளத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் பக்கம் இழுத்தார்.
அதைத்தொடர்ந்து 2020 பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியது. இந்திய தேசிய காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து `மகாகாத்பந்தன்’ என்ற பெரும் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ். எதிர்தரப்பில் பா.ஜ.க., விகாஷீல் இன்சான், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுடன் ஐக்கிய ஜனதா தளம் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிவில், பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களில் வென்று இருபது இடங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இருப்பினும், அந்தத் தேர்தலில் பா.ஜ.க(74), ஐ.ஜ.த(43), காங்கிரஸ் (19), எல்லாக் கட்சிகளையும் விட அதிகமானத் தொகுதிகளில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (75) வெற்றிபெற்று தடம் பதித்தது. பீகார் சட்ட மன்றத்தில் மிக இளம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் அமர்ந்தார் தேஜஸ்வி யாதவ்.
அதைத்தொடந்து, மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்னையையும் சட்டமன்றத்தில் பேசி, முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கு கடும் நெருக்கடிகள் கொடுத்து வந்தார். அதேசமயம், கட்சிக்குள்ளாகவும் தேஜஸ்வி யாதவின் செல்வாக்கு வேகமாக வளர்ந்தது. ஒரு கட்டத்தில், லாலு பிரசாத் ஜாமீனில் வெளிவந்த போதும், அவரது பேச்சு கட்சி மட்டத்தில் எடுபடவில்லை என்றும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்பார் என்றும் தேசிய ஊடகங்கள் வரை விஷயங்கள் கசிய, பீகார் அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு, லாலு பிரசாத் மறுப்பு தெரிவிக்கவும் விவகாரம் மெல்ல அடங்கியது. கட்சியின் நிறுவனத் தலைவராக லாலுபிரசாத் இருப்பினும், செயல் தலைவராகவும், கட்சிக்குள் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைவராகவும் தேஜஸ்வி யாதவ் வளர்ந்து வருகிறார். அதேபோல, இவரின் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப்பைக் காட்டிலும் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தேஜஸ்வி யாதவே செல்வாக்கில் முன்னிலை பெற்றவராகத் திகழ்கிறார்.
மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே பொதுவாக வெற்றிபெறும் என்ற கருத்தை உடைத்தெறியும் வகையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் நடைபெற்ற போச்சாஹான் சட்டமன்ற இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன்மூலம், பீகார் சட்ட மன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.எம். கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள் தேஜஸ்வி யாதவின் தலைமையை ஏற்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணைந்திருக்கின்றனர். இதன்மூலம், சட்டமன்றத்தில் 80 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளமும், தனிப்பெரும் தலைவராக தேஜஸ்வி யாதவும் உருவெடுத்திருக்கிறார்.