திருச்சுழி அருகே எம். புளியங்குளத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவரை அடித்து கொலை செய்துவிட்டு, விபத்து போல் நாடகமாடிய மனைவியையும், இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம், மின்வாரிய ஊழியர். இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை நரிக்குடி – திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போலீசார், முத்துராமலிங்கத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரனையில் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி என்பதும், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தை அன்னபூரணியுடன் முத்துராமலிங்கத்துடன் வந்ததும் தெரியவந்தது. இருவரும் திருச்சுழி பகுதியில் குடியிருந்து பின்பு எம்.புளியங்குளம் கிராமத்தில் புதிதாக வீடு கட்டி அங்கு குடியிருந்ததுள்ளனர்.
இந்த நிலையில் சுனிதாவின் அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போலீசார், கணவரின் மெக்கானிக் கடையில் வேலை செய்து வரும் 22 வயதான மலையரசனுடன் நீண்ட நேரம் பேசியிருப்பதை வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியத்தில் முத்துராமலிங்கத்தின் மரணத்தின் பின்னணி அம்பலமானது.
முத்துராமலிங்கம் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன் மின்வாரியத் துறையில் பணி கிடைத்துள்ளது. அவர் மதுரை அரசரடியில் பயிற்சியில் இருந்த போது சுனிதாவுக்கு அவரது கணவர் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்த மலையரசனுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரது கணவருக்கு தெரிய வரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார்.
இதே போல சுனிதாவின் மகள் அன்னபூரணி, மலையரசனின் நண்பர் சிவா என்ற இளைஞரை காதலித்துள்ளார் இதற்கும் முத்துராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சுனிதா, இருவரது காதலுக்கும் இடையூறாக இருக்கும் தனது கணவரை கொலை செய்து சடலத்தை விபத்து நடந்த மாதிரி சாலையில் வீசிவிட மலையரசனிடம் செல்போனில் கூறியுள்ளார்.
அதன்படி மலையரசன் அவரது நண்பர் சிவாவுடன் சேர்ந்து, சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை அடித்து கொலை செய்து முத்துராமலிங்கத்தின் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி 3 கிலோமீட்டர் தொலைவில் நரிக்குடி – திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சுனிதா , மலையரசன், சிவா ஆகிய மூவரையும் திருச்சுழி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.