திருப்பதியில் 25 ஆண்டுகள் தரிசனம் செய்யும் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1982ஆம் ஆண்டு உதய, அஸ்தமன சேவா (காலை முதல் மாலை வரை தரிசனம்) டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. உதய, அஸ்தமன சேவா டிக்கெட் பெற்றவர்கள் ஏழுமலையான் கோயிலில் காலை சுப்ரபாதம் முதல் மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை வரை நடைபெறும் அனைத்து உற்சவங்களிலும் குடும்பத்தினருடன் பங்கேற்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை என 25 ஆண்டுகளுக்கு இந்த தரிசனம் செய்து கொள்ளலாம்.

அதன்படி அதற்கான டிக்கெட் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட் பெற்றவர்களின் குடும்பத்தினர் 25 ஆண்டுகளுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த டிக்கெட் விலை 2006ஆம் ஆண்டு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தரிசனம் செய்ய 531 டிக்கெட்டுகளுக்கான விற்பனை தொடங்கியுள்ளது. அதன்படி, ரூ.1.50 கோடி நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் செய்ய அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது. அவர்கள் வெள்ளிக்கிழமை நடைபெறும் அபிஷேகத்தில் பங்கேற்கலாம். அதேபோல், வெள்ளிக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்குபவர்களுக்கு உதய, அஸ்தமன திட்டத்தில் தரிசனம் செய்ய 25 ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்படுவர். அறிவிக்கப்பட்ட 6 மாதங்களில் இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் பக்தர்கள் நன்கொடை வழங்கி டிக்கெட்டுகள் பெற்றுள்ளனர்.

பக்தர்களின் இந்த நன்கொடையை பயன்படுத்தி திருப்பதியில் குழந்தைகளுக்காக இலவச மருத்துவமனை ரூ.500 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் முதல்வர் ஜெகன்மோகன் இந்த திட்ட பணியை தொடங்கி வைத்தார். தற்போது குழந்தைகள் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மொத்தம் உள்ள 531 டிக்கெட்டுகள் மூலம் ரூ.600 கோடி நன்கொடை திரட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இன்னும் 6 மாதங்களில் மீதமுள்ள டிக்கெட்டுகளையும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் மீதமுள்ள டிக்கெட்டுகளையும் வெளியிட்டு நிதி திரட்ட தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலவச குழந்தைகள் மருத்துவமனைக்கான கட்டிட பணிகளை ஓராண்டுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.