சென்னையில் மாற்று மதத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்த பெண்,வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நொளம்பூரை சேர்ந்த முருகன் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மூத்த மகள் அருந்ததி, கல்லூரியில் படிக்கும் போது சாகித் இப்ராஹிம் என்பவரை காதலித்து, தங்களின் சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ததாகவும், மதம் மாறி திருமண வாழ்க்கையை அவர் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் அருந்ததிக்கு பெண் குழந்தை பிறந்த பின்னர், அவரை வீட்டு வேலைகளை அதிகம் செய்ய வைத்தும், வரதட்சணை கேட்டும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால், சுமார் 5 சவரன் நகையை முருகன் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 22ஆம் தேதி பிரச்சனை அதிகமாகி கணவர் வீட்டிற்கு தெரியாமல் தனது பிறந்த வீட்டிற்கு வந்த அருந்ததி, வரதட்சனை கொடுமை தொடர்பாக கண்ணீர் மல்கத் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சாகித் மற்றும் அவரது குடும்பத்தினர் தகராறு செய்ததை அடுத்து, அருந்ததியின் விருப்பமில்லாமல் அனுப்ப முடியாது என முருகன் கூறியதால் அவர் மீது சாகித் புகாரளித்துள்ளார். பின்னர், அந்த புகார் வாபஸ் பெறப்பட்டதால் சமாதானம் ஆகி மகளையும் குழந்தையையும் சாகித்தின் வீட்டிற்கு அனுப்பியதாக முருகன் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மதியம், அருந்ததி வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்ததாக அவரது நாத்தனார் தன்னை தொடர்பு கொண்டு கூறியதாகவும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை பார்த்தபோது உயிரற்ற நிலையில் இருந்ததாகவும் முருகன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது மகளை அதிக நகைகள் போட்டு திருமணம் செய்து வைத்ததால், மூத்த மகளான அருந்ததியிடம் வரதட்சணை கேட்டு கணவரும், கணவர் குடும்பத்தாரும் கொடுமைப்படுத்தியதுள்ளதால், இந்த விவகாரத்தில் தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தந்தை முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அவர் கீழே குதித்த வீட்டின் மொட்டை மாடி பகுதியில் ரத்தக் கறைகள் அதிகம் இருப்பதாகவும், கொடுமைப்படுத்தியதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி நடவடிக்கை எடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருமணம் நடைபெற்று மூன்று வருடத்தில் அருந்ததி உயிரிழந்துள்ளதால் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இதன்படி, முகப்பேரில் உள்ள அலுவலகத்தில் அருந்ததியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நுங்கம்பாக்கம் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.