நடந்துமுடிந்த நியூசிலாந்து சீரிஸில் கொழுந்துவிட்டு எரிந்த தீப்பந்தமாய் காட்சியளித்த பேர்ஸ்டோ இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் நனைந்த வத்திகுச்சி போலவே ஆடிக்கொண்டிருந்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது நாளிலேயே ஓரளவுக்கு செட்டில் ஆகியிருந்த அவரால் நேற்றைய நாளின் தொடக்கத்தில் 20 என்னும் ஸ்ட்ரைக் ரேட்டைகூட தாண்டியிருக்க முடியவில்லை. இதனால் ‘மூவிங் டே’ என்றழைக்கப்படும் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டம் சற்று சாதாரணமாகவே தொடங்கியது. ஆனால் இந்நிலவரம் அதிக நேரம் நீடிக்கவில்லை. தன் அனல் பறக்கும் ஸ்லெட்ஜிங் மூலம் அவரை விராட் கோலி லேசாக உரசி பேர்ஸ்டோவிற்கு தன் முந்தைய ஞாபகப்படுத்திவிட்டார். ஆம், கடந்த 4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்திருந்தார் பேர்ஸ்டோ.
அதன் பிறகு பேர்ஸ்டோவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபக்கம் ஸ்டோக்ஸும் ஷாட்களை ஆடத் தொடங்க இங்கிலாந்து ஸ்கோர் போர்டில் ரன்கள் குவிய தொடங்கின. போதாக்குறைக்கு ஃபீல்டிங்கிலும் ஸ்டோக்ஸ் கொடுத்த இரண்டு வாய்ப்புகளைக் கோட்டைவிட ஒருவழியாகச் சேதாரம் அதிகம் ஆவதற்கும் முன்பாகவே அவர் கொடுத்த மூன்றாவது கேட்சை அசத்தலாக பிடித்து வெளியேற்றினார் கேப்டன் பும்ரா.
இந்திய அணியின் பௌலிங் சிறப்பாகவே இருந்தாலும் பேர்ஸ்டோவின் ஆட்டத்திற்கு இவர்களிடம் எந்த பதிலும் இல்லை. மழையைத் தவிர அவரைத் தடுக்க எவரும் வருவதாய் தெரியவில்லை. கோலியுடனான அச்சம்பவத்திற்கும் பேர்ஸ்டோவின் ஸ்கோர் 16 ( 64 பந்துகள்) ஆனால் அடுத்த 119 பந்துகளை மட்டும் 100 ரன்களை அடித்திருந்தார் அவர். சதம் போட்ட கையோடு ஒருவழியாக ஷமியிடம் வீழ அங்கு சரியத்தொடங்கிய இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 284 ரன்களில் முடிவுக்கு வந்தது.
132 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் முதல் ஓவரிலேயே வெளியேற ஹனுமா விஹாரியும் 11 ரன்களில் நடையைக் கட்டினார். பழைய ஆக்ரோஷமான கோலியை களத்தில் பார்த்தவுடன் அவர் பேட்டிங்கிலும் அது வெளிப்படும் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருந்தனர் அவரின் ரசிகர்கள். காரணம் பிராட் பந்தில் ஓர் அட்டகாசமான கவர் ட்ரைவ் மூலம் தன் ரன் கணக்கை கோலி தொடங்கிய விதம் அப்படி. ஆனாலும் இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. சற்று எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆன ஸ்டோக்ஸின் பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்சாகி பெவிலியன் திரும்பினார் அவர்.
ஓர் நிலையான பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் அப்போதைய உடனடி தேவையாய் இருந்தது. ‘உலகமே ஐ.பி.எல் ஆடிட்டு இருந்தப்போ ஒருத்தன் மட்டும் இங்கிலாந்துல கவுண்டி கிரிக்கெட் ஆடி ஃபார்ம்க்கு வந்தான்’. ஆம், அசராத டிபன்ஸ் மூலம் தன் முக்கியத்துவத்தை மீண்டுமொரு முறை நிரூபித்தார் புஜாரா. அவரின் கடின உழைப்பு சற்றும் வீண்போகவில்லை. தற்போது ஓப்பனராக வேறு களம் இறங்கும் அவர் அப்புதிய சவாலையும் திறம்பட சமாளித்து அவருக்கே உரிய பாணியில் ஆடி அரை சதத்தைப் பதிவு செய்தார். மறுபுறம் பண்ட் தன் ஃபார்மை தொடர எந்த இடர்களும் இல்லாமல் உயரத்தொடங்கியது இந்தியாவின் ஸ்கோர்.
“வாழ்க்கை எப்படி வேகத்துடன், அமைதியுடன், இளமையுடன் பழமையுடன், இரைச்சலுடன், அமைதியுடன் ஒருசேர சேர்ந்து செல்கிறதோ அதே போலதான் பண்ட், புஜாரா இருவரின் பாட்னர்ஷிப்பும்” என்று ஹர்ஷா போக்லே தன் டீவீட்டில் குறிப்பிட்டு இருந்தார். பண்ட் தன் வழக்கமான அதிரடியை காட்டினாலும் நாளின் இறுதியில் அவரிடம் நல்ல முதிர்ச்சி வெளிப்பட்டது. ஜோ ரூட் வீசிய அவுட்சைட் ஆப் வலையில் வீழாமல் கடைசி வரை பொறுமை காத்தார் அவர்.
முந்தைய நாட்கள் போல மூன்றாவது நாளின் ஆட்ட நேர முடிவிலும் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. மழையால் இழந்த ஓவர்களை மீட்டெடுக்க அரைமணி நேரம் கூடுதலாக நடக்க நாளின் முடிவில் இந்தியா 125/3 என்ற நிலையில் உள்ளது (257 ரன்கள் முன்னிலை). ஆனால் ப்ரெண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் கூட்டணியினாலான புதிய இங்கிலாந்து அணி எவ்வளவு பெரிய டார்கெட்டையும் மிக எளிதாய் சேஸ் கூடியது. இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா அல்லது கம்பேக் கொடுக்குமா இங்கிலாந்து. பொறுத்திருந்து பார்ப்போம்!