நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்னாத் ஷிண்டே வெற்றி!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்கவும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ள சபாநாயகர் தேர்தலை நடத்தவும் மகாராஷ்டிர மாநிலத்தில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று கூடியது. சபாநாயகர் தேர்தலில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட மும்பை கொலபா தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்னாத் ஷிண்டே அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதன்பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்னாத் ஷிண்டே வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 164 வாக்குகள் பெற்று ஏக்னாத் ஷிண்டே வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மாகாராஷ்டிரா சட்டப்பேரவையில், உறுப்பினர் ஒருவர் உயிரிழந்து விட்டதால், தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. இதில், பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 164 பேரின் ஆதரவை பெற்று ஏக்னாத் ஷிண்டே வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.