மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தீ பற்றி எரிய கதறும்போது வன்முறையாளர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை பதறச் செய்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பியாரி சஹாரியா. இவருடைய கணவர் அர்ஜூன் சஹாரியா. இவர்களுக்கு அரசு நலத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற மூன்று பேர் அந்தப் பெண்ணை அவரது நிலத்தில் வைத்து எரித்துக் கொல்ல முயன்றனர். ஆனால் படுகாயங்களுடன் மனைவியை மீட்ட அர்ஜூன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
நிலம் இருக்கக் கூடாதா? சம்பவம் குறித்து அர்ஜூன் சஹாரியா கூறுகையில், “எங்களுக்கு அரசாங்கம் நில ஒதுக்கீடு செய்தது. அதில் நாங்கள் விவசாயம் செய்வதற்காக உழுதோம். ஆனால் ஊரில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு அது பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் எங்களை எச்சரித்துக் கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் எங்கள் நிலம் அபகரிக்கப்பட்டது அது தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தோம். பின்னர் வருவாய் துறை எங்களுக்கு அந்த நிலத்தை மீட்டுக் கொடுத்தது. இருந்தாலும் எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது.
சனிக்கிழமை நான் எங்கள் நிலத்திற்கு சென்றேன். அங்கிருந்து பிரதாப், ஹனுமந்த், ஷ்யாம் கிரா ஆகிய மூன்று பேர் ட்ராக்டரில் வேகமாகச் சென்றனர். நான் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என அஞ்சி நிலத்தை நோக்கி விரைந்து சென்றேன். அங்கே புகைக்கு மத்தியில் என் மனைவி மயங்கிக் கிடந்தார். உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
அர்ஜூன் சஹாரியா ஏற்கெனவே குறிப்பிட்ட இந்த மூவரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார். அந்தப் புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் அவர் மனைவி ராம்பிரியா சஹாரியா இந்த வன்முறைக்கு ஆளாகியுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்: இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், பாஜக ஒருபுறம் திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கி கொண்டாடுகிறது. மறுபுறம் அது ஆளும் மாநிலத்தில் பழங்குடியினப் பெண் மீது வன்கொடுமை அரங்கியேறியதை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது அவமானகரமானது என்று பதிவு செய்துள்ளார்.