இமாச்சலில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்: ரூ.2 லட்சம் நிவாரணம்

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சல் பிரதேசம் குலு மணாலியில் இருந்து சைன்ஜ் பகுதிக்கு 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப்பேருந்து ஒன்று சென்றுள்ளது. சைன்ஜ் பள்ளத்தாக்கு நியூலியில் இருந்து ஷன்ஷார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜங்லா என்ற இடத்தில் அந்த பேருந்து எதிர்பாரா விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக குலு போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து பேசிய அசுதோஷ் கர்க்,’ ஜங்லா பகுதியில் ஏற்பட்ட விபத்து சுமார் காலை 8 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,’என்று தெரிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக நியூலி-ஷன்ஷார் சாலையில் பல மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து கவிழ்ந்து 16 பேர்  உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்தது என்று பிரமர் மோடி ட்வீட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து அறிந்து மனம் உடைந்ததாகவும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.  இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்துக் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, இமாச்சல் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நாட்டா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.