பரபரப்பான இடங்களில் பார்த்திருப்போம். கூட்டத்தின் நடுவில் ஒருவர் பொத்தென்று விழுந்து, அவரின் தசைகள் இறுக்கமாகி உடல் முழுவதும் உதறி, வாயிலிருந்து நுரைததும்பி அவருக்கு வலிப்பு வந்திருக்கும்.
உலக அளவில் 50 மில்லியன் மக்கள் வலிப்பு நோயினால் (Epilepsy) பாதிக்கப்படுகின்றனர் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.
மூளைச் செல்கள் மற்றும் மூளை நரம்புச் செல்களில் ஏற்படும் பாதிப்பின் விளைவாகவே வலிப்பு உண்டாகிறது. ஒரு மனிதனின் வாழ்நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சில நேரங்களில் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிய முடிவதில்லை. இருந்தாலும், விபத்தினால் தலைப் பகுதியில் ஏற்படும் காயங்கள், நரம்பு மண்டலக் குறைபாடு, மூளைக்கட்டிகள் போன்றவை வலிப்பு ஏற்பட காரணமாக அமையலாம்.
முதலுதவி: ஒருவருக்குத் திடீரென வலிப்பு வந்துவிட்டால் முதலில் வலிப்பு வந்தவரின் பக்கத்தில் கூரான பொருள்கள் எதுவும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அமைதியாக அவரை தரையில் படுக்கவைத்து, இறுக்கமான ஆடையைத் தளர்த்தி, ஒருபக்கமாகச் சாய்த்து வாயில் உள்ள உமிழ்நீர் முற்றிலும் வெளிவரும்படி செய்யலாம். இதன்மூலம் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளமுடியும்.
பொதுவாக 5 நிமிடங்களுக்குள் வலிப்பானது சரியாகிவிடும். 5 நிமிடங்களுக்கு மேலும் தொடரும்போது மருத்துவமனைக்கு விரைய வேண்டும். வலிப்பு நின்றவுடன் நோயாளியை ஓய்வெடுக்க அல்லது தூங்கவைக்க வேண்டும்.
பொதுவாக வலிப்பின் வகை மற்றும் அறிகுறியின் அடிப்படையில் நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
வகைகள்: இடியோபதிக் (ldiopathic) – நோய்க்கான காரணம் என்ன என்பது தெரியாது. க்ரிப்டோஜெனிக் (Cryptogenic) – நோய்க்கான காரணம் இருந்தாலும், மருத்துவரால் குறிப்பிட்டுக் கூற இயலாது. சிம்டோமேடிக் (Symptomatic) – நோய்க்கான காரணம் தெளிவாகத் தெரியும்.
சிகிச்சை: மருத்துவரின் அறிவுரைப்படி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை (Anti Epileptic drugs) உட்கொள்ள வேண்டும்.
வலிப்பு நோயின் தீவிரத்தை பொறுத்து கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு) முதல் மூளை அறுவை சிகிச்சை வரை பரிந்துரைக்கப்படுகிறது.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட காசிடி மேகன் (Cassidy Megan) என்பவர், இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என நினைத்தார். காசிடி மேகனும், நோவா ஸ்காடியா என்பவரும் இணைந்து வருடந்தோறும் மார்ச் 26-ம் தேதியை ‘வலிப்பு விழிப்புணர்வு நாளா’கக் கடைப்பிடித்தனர்.
இந்த தினம் ’ஊதா நாள் (Purple day)’ என்றும் அறியப்படுகிறது. இந்நாளில் மக்கள் ஊதா நிற ஆடையை அணிந்து வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.