இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை பணியமர்த்தும் மத்திய அரசின அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மத்திய ஆயுதப்படை முன்னாள் வீரர்களுக்கு (சிஏபிஎஃப்) கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (TNUSRB) கீழ் கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில், பிஎஸ்எஃப் (BSF), சிஐஎஸ்எஃப் (CISF), ஐடிபிபி (ITBP) மற்றும் மற்றும் எஸ்எஸ்பி (SSB) உள்ளிட்ட பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நிலையில், தற்போது டிஎன்எஸ்யுஆர்பி (TNUSRB) வெளியிட்டுள்ள 3,552 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே 5 சதவீத இடஒதுக்கீடு என்றும் சிஏபிஎஃப் (CAPF) பணியாளர்கள் இடஒதுக்கீடு இல்லை என்றும் கூறியுள்ளது.
இது குறித்து டிஎன்எஸ்யுஆர்பி (TNUSRB)- ன் தலைவர் சீமா அகர்வால் கூறுகையில்,
தமிழக அரசு இதுவரை ஓய்வு பெற்ற துணை ராணுவப் படை வீரர்களுக்கு தவறுதலாக இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. “இப்போது நாங்கள் மாநில அரசின் உத்தரவின்படி கண்டிப்பாக செல்கிறோம். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் ஒரே மாதிரி இல்லை. 5 சதவீத இடஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளது” என்று அகர்வால் கூறியுள்ளார்.
இது குறித்து முன்னாள் பிஎஸ்எஃப் (BSF) வீரர் எஸ்.விஜய் குமார் கூறுகையில், “2012-ல் உள்துறை அமைச்சகம் அலுவலக குறிப்பேடு மூலம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பலன்களை துணை ராணுவப் படைகள் அல்லது சிஏபிஎஃப் (CAPF) இன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் நீட்டிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது.
எம்எச்ஏ (MHA) குறிப்பிற்கு முன்பே, டிஎன்எஸ்யுஆர்பி (TNUSRB) இரு குழுக்களுக்கும் 5 சதவீத ஒதுக்கீட்டை வழங்குகிறது.” 2011 ஆம் ஆண்டு டிஎன்எஸ்யுஆர்பி (TNUSRB) எனது ஆர்டிஐ (RTI) விண்ணப்பத்திற்கு அளித்த பதிலில் இருவருக்கும் 5% இடஒதுக்கீடு என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது இந்த திடீர் இடஒதுக்கீடு ரத்து தமிழக காவல்துறை பணியில் சேருவதற்காக பணியை ராஜினாமா செய்த துணை ராணுவப் படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 வருட சேவைக்குப் பிறகு 5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு காவல்துறையில் சேரும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு பிஎஸ்எஃப்-ல் இருந்து விலகியதாக குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் சிஏபிஎஃப் (CAPF) ஊழியர்கள், அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்
“கடந்த தேர்வில் கான்ஸ்டபிள் பணி வாய்ப்பை ஒரு மதிப்பெண் மட்டுமே இழந்தேன். வரவிருக்கும் தேர்வுக்கு நான் நன்கு தயாராகிவிட்டேன். ஆனால் இப்போது டிஎன்எஸ்யுஆர்பி (TNUSRB) இன் கீழ் வேலைக்கு விண்ணப்பிக்க கூட எனக்கு தகுதி இல்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநில அரசாங்கமே செய்யும் போது பல ஆண்டுகளாக எல்லையில் தேசத்துக்காகப் போராடியவர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய வேலைகளை வழங்குவதில் இவ்வாறு செய்தால், அக்னிவீரர்களுக்கு வேலை உறுதியளிக்கும் கார்ப்பரேட்டுகள் எதிர்காலத்தில் தங்கள் வார்த்தையை எவ்வாறு காப்பாற்றுவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து உடனடியாக தலையிட்டு இடஒதுக்கீட்டை மீட்க வேண்டும் என குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் அகில இந்திய பிஎஸ்எஃப் முன்னாள் படைவீரர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி சண்முகராஜ், மாநில அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கேரளா போன்ற சில மாநிலங்கள் சொத்து வரி போன்ற சில வரிகளை செலுத்துவதில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கின்றன. ஆனால் தமிழக அரசு முன்னறிவிப்பின்றி ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டைக் கூட பறித்துவிட்டது. நூற்றுக்கணக்கான முன்னாள் சிஏபிஎஃப் (CAPF) பணியாளர்கள் தமிழக காவல்துறையில் ஐந்து சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பணியாற்றுகின்றனர். என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“