“எக்மோ சிகிச்சை மூலம், இறக்கும் தருவாயில் இருந்த 60 சதவிகிதம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்” என்று மதுரையில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
எக்மோ சிகிச்சை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரை, வேலம்மாள் மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
வேலம்மாள் மருத்துவமனை தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்த இந்த கருத்தரங்கில் பேசிய மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், “இதய நோய் பிரிவில் கடந்த 5 ஆண்டுகளில் வேலம்மாள் மருத்துவமனை அதிக அளவில் சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது. மேலும் புதிய முறை மருத்துவத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ வசதிகளுடன் தென் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது” என்றார்.
வேலம்மாள் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ராம் பிரசாத், “எக்மோ என்பது இதயமும், நுரையீரலும் செயல் இழந்த பிறகு, பிற சிகிச்சைகள் எதுவும் செய்ய முடியாத நிலையில் பயன்படுத்தும் முக்கிய சிகிச்சை முறை.
கொரோனா அதிகரித்த காலகட்டத்தில் இந்த எக்மோ சிகிச்சை முறை பற்றி மக்களுக்கு அதிக அளவு தெரிய வந்தது. ஒருவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் எக்மோ சிகிச்சை அளிக்கப்படும். இறக்கும் தருவாயில் இருந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் இந்த சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்” என்றார்.
எக்மோ சிகிச்சை எப்போது?
அதிதீவிர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நுரையீரல் மற்றும் இதயம் செயலிழக்கும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வென்டிலேட்டர், எக்மோ போன்ற சில வகையான சுவாசக் கருவிகளைத்தான் பொருத்துவார்கள்.
வென்டிலேட்டர் கிட்டத்தட்ட செயற்கை சுவாசக்குழாய் போன்றது. மூச்சுவிட தேவையான காற்றை நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் கடத்துவதுதான் இதன் வேலை. இதயம், நுரையீரல் இரண்டுமே தேவையான ரத்தமும் ஆக்சிஜனும் பெறமுடியாமல் சிரமப்படும் சூழலில், எக்மோ பொருத்தப்படும்.