இந்திய மாநிலம் தெலுங்கானாவில் தனது மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் மாப்பிள்ளையை மாமனார் கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் போடலகொண்டப்பள்ளியைச் சேர்ந்த மென்பொறியாளர் நாராயண ரெட்டி(26), அதே ஊரைச் சேர்ந்த கந்தலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியை காதலித்து வந்தார்.
ஆனால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் எதிர்ப்புகளை மீறி நாராயண ரெட்டி- ரவாளி ஜோடி திருமணம் செய்து கொண்டது.
அதன் பின்னர் தங்கள் மகளை வலுக்கட்டாயமாக வெங்கடேஸ்வர ரெட்டியின் தரப்பினர் தங்களுடன் கூட்டி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உதவியை நாடிய நாராயண ரெட்டி, தனது மனைவியை ஒப்படைக்குமாறு வெங்கடேஷ்வர ரெட்டியின் குடும்பத்தை கேட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த நீதிமன்றம், ரவாளியை அவரது பெற்றோருடன் இருக்க அனுமதி அளித்துவிட்டது. வெங்கடேஷ்வர ரெட்டி உடனடியாக தனது மகளுக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவாளி தனது காதல் கணவருடன் போனில் பேசிவந்துள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த வெங்கடேஷ்வர ரெட்டி, தனது உறவினர் சீனிவாச ரெட்டியை அணுகி சிலருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, நாராயண ரெட்டியை சமரசம் பேச அழைத்து மது விருந்து வைத்துள்ளார் வெங்கடேஸ்வர ரெட்டி. அதன் பின்னர் நாராயண ரெட்டியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, ஜின்னாராம் பகுதியில் உள்ள காட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு கூட்டாளிகளுடன் வெங்கடேஸ்வர ரெட்டி தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், நாராயண ரெட்டியை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது நல்லுரு கிராமத்தின் புறநகர் பகுதியில் நாராயண ரெட்டியின் உடலை கைப்பற்றினர். பின்னர் வெங்கடேஸ்வர ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்