ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
74 வயதான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான டோராண்டா கருவூல மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகக் கோளாறு தொடர்பான சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவை வெளிநாடு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று லாலு பிரசாத் யாதவ் தனது வீட்டில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்ததில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் முதுகிலும் காயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் லாலு பிரசாத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருந்த நிலையில் லாலு பிரசாத் யாதவிற்கு அடிபட்டு உள்ளதால் குடும்பத்தினரும், தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.