பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதேபோல், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையானது. இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு உள்ளிட்டவைகள் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதையடுத்து, பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கில், “நுபுர் ஷர்மா நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நுபுர் ஷர்மா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்
அகிலேஷ் யாதவ்
மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. உச்ச நீதிமன்றம் கூறியதை மேற்கோள்காட்டி, சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், “நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைத்ததற்காக, முகம் மட்டுமல்ல, உடலும் மன்னிப்பு கேட்க வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்.” என பதிவிட்டார். நுபுர் சர்மாவை முகம் எனவும், அவருக்கு பின்புலத்தில் பாஜக உள்ளதாக அதனை உடல் எனவும் மறைமுகமாக அவர் விமர்சித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், அகிலேஷ் யாதவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அகிலேஷ் யாதவ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மகிளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்னை ஒரு கட்சியின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் இவரைப் பாருங்கள். அவர் நுபுர் ஷர்மாவை தாக்க மக்களை தூண்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.