டி.டி.வி தினகரன் தொடர்ந்து அவதூறு வதந்திகளை பரப்பி வந்தால் அவரை நீதிமன்றத்தில் நிற்க வைப்போம் என்று அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ச
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில்வே மேம்பால புணரமைப்பு பணி முழுமையாக முடிவடையாத நிலையில் வேலூர் மாநகர் அதிமுக மாவட்ட செயலாளர் SRK அப்பு கடந்த 1-ம் தேதி பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வைத்தார். இது தொடர்பாக வருவாய் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்ஆர்கே அப்பு மீது பிணையில் வரமுடியாத பிரிவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேப்பனஹல்லி எம்.எல்.ஏவுமான கே.பி.முனுசாமி சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் பிரச்னைக்காக போராடும் அதிமுகவினர் மீது வழக்குத் தொடுத்து கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 11ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும் எனவும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆகியே தீருவார் எனவும் கூறினார்.
மேலும், பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை வரவைத்ததாக வைத்திலிங்கம் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, வைத்திலிங்கம் எங்களோடு பயணித்தவர் அவர் இப்படிச் சொல்வது வேதனையாக இருக்கிறது. அவர் விரக்தியில் இருக்கிறார் என கேபி முனுசாமி கூறினார்.
அதேபோல் பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை இபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறிவருகிறார் என்ற கேள்விக்கு, ”அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்; மீண்டும் ஒருமுறை டிடிவி தினகரன் இப்படி சொன்னால் அவரை நீதிமன்றத்தில் நிற்க வைக்கும் சூழல் வந்துவிடும். அவர் இந்த இயக்கத்துக்கு எந்த தியாகத்தையும் செய்யாதவர். இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர். அவருக்கு கட்சியை பற்றி பேச எந்தவித தகுதியும் கிடையாது. தகுதி இல்லாத நபர் மீண்டும் இதுபோன்று கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும்” என்று கூறினார்.
கேபி முனுசாமியின் எச்சரிக்கை குறித்த கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ அதிமுக பொதுக்குழுவுக்கு வந்தவர்களுக்கு பணம் தரப்பட்டதாக எனக்கு வந்த தகவலை தெரிவித்தேன். என் மீது கே.பி. முனுசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார்; நான் தனிக்கட்சி தொடங்கிவிட்டேன், அதிமுகவில் என்ன நடந்தால் எனக்கென்ன?” என்று பதிலளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM