'குஜராத்திலும் இலவச மின்சாரம்' – வாக்குறுதிகளை அள்ளி வீசும் ஆம் ஆத்மி!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரமும் பொது மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, முதன் முறையாக, அம்மாநிலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சராக, அக்கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பதவி ஏற்றுள்ளார்.

இதை அடுத்து, இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிட, ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கண்ட மாநிலங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

இனி வாரத்தில் ஒரு முறை மாநிலத்திற்கு வருவேன். ஊழல், முறைகேடுகள் பற்றி பொது மக்களிடம் கலந்துரையாடுவேன். குஜராத் மாநிலத்திலும் மலிவான, இலவச 24 மணி நேர மின்சாரம் கிடைக்கும். விரைவில் மாநிலத்தின் மின்சாரப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கொண்டு வருகிறேன்.

குஜராத் மாநில அமைச்சர்கள் ஆயிரக்கணக்கில் மின்சார யூனிட்களை பயன்படுத்தினாலும் கட்டணம் செலுத்துவதில்லை. இந்த சலுகையை பொது மக்கள் ஏன் பெறக் கூடாது? குஜராத் மாநிலத்தில் மின்வெட்டு இல்லை என பாஜக தலைவர்கள் பொய் சொல்லி வருகின்றனர். மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினால் கொள்ளையடிக்க பணம் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் அமைச்சர்கள் உள்ளனர்.

ஊழலில் பணத்தை மிச்சப்படுத்தி விட்டு பொது மக்களுக்கு மானியம் வழங்குகிறோம். அதனால் தான் டெல்லி மக்கள் இலவச மின்சாரத்தை பெற்று வருகின்றனர். டெல்லியில் நாங்கள் அதைச் செய்த போது, பெரிய மாநிலத்தில் இதைச் செய்ய முடியாது என்று பாஜகவும், காங்கிரசும் கூறின. ஆனால் அதை எல்லாம் முறியடித்து பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.