தென் மாவட்டங்களில் பலத்த காற்று – மின் விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து மின்வாரிய தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் கி.செல்வகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்பாதைகளில் விழுந்ததால், மின்தடைகள் ஏற்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
காற்று காலங்களின்போது மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். மின்கம்பிகள் மற்றும் சர்வீஸ் வயர்கள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து உடனடியாக அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதோடு, மின்வாரிய அலுவலர்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பலத்த காற்று காரணமாக மரக் கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால், மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மின் கம்பத்துக்கு போடப் பட்டுள்ள ஸ்டே வயர்களில் கால்நடைகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடை களை கிடை அமர்த்துவதோ கூடாது. மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்களில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். மின் விநியோகம் தொடர்பான அனைத்து விதமான சேவைகளுக்கும் ‘மின்னகம்’ மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987-94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.