விருதுநகர்: 1100 ஆண்டுகளுக்கு முந்தைய சமண பள்ளியின் தடய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

காரியாபட்டி அருகே 1100 வருடங்களுக்கு முன்பு செயல்பட்ட சமண பள்ளியின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி புல்லூர் கிராமத்தில் பழமையான இடிந்த கோவில் ஒன்று இருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த போஸ்வீரா மற்றும் மாரீஸ்வரன் ஆகியோர் தகவல் அளித்தனர். இந்த தகவலின் படி, பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
image
அந்த ஆய்வில் மொத்தம் ஒன்பது துண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. அனைத்தும் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. இரண்டு அரசர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டும், இராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது.
புல்லூரின் பழைய பெயர் திருப்புல்லூர் என்பது இக்கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. மேலும் இது ஒரு சமண பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது. இக்கோவிலின் பெயர் திருப்புல்லூர் பெரும்பள்ளி என்றும் , உள்ளிருக்கும் இறைவன் அருகர் பட்டாளகர் என்றும் அறிய முடிகிறது. இக்கோவிலுக்கு நந்தா விளக்கெறிக்க ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதும், இக்கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
image
பாண்டிய நாட்டில் சமண மதம் மிகச் சிறப்பான நிலையில் இருந்ததற்கு இச்சமண பள்ளியே ஒரு சிறந்த உதாரணம் ஆகும் என பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.