தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிப்படங்களில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி. கேராளவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் ‘Slumdog Millionaire’ படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதையும், ‘கேரள வர்மா பழசி ராஜா’ என்ற மலையாளப் படத்திற்க்காக சிறந்த ஆடியோ கிராபிக்கான தேசிய விருதையும் பெற்றவர். இப்படி இந்திய அளவில் முக்கிய பிரபலமாக இருக்கும் இவர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விமர்சித்து பதிவிட்ட ட்வீட் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரமாண்டமாக வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR). இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நண்பர்களாக நடித்திருந்தனர். இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படத்தை குறித்து ட்வீட் போட்ட ரசூல் பூக்குட்டி, “ஆர்.ஆர்.ஆர். படம் தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல் கதை (gay love story)” என்று விமர்சித்துள்ளார். மேலும் படத்தின் கதாநாயகியான ஆலியா பட் அதில் ஒரு செட் பிராப்பர்ட்டி போன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதைக் கண்ட சமூக வலைதளப் பயனர்கள் பலர் ஆஸ்கர் நாயகனிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை என்று ரசூல் பூக்குட்டியின் பதிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே வெளிநாட்டு ஊடகங்கள் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் குறித்து இப்படியானதொரு விமர்சனத்தை வெளியிட்டு அது வைரலானது குறிப்பிடத்தக்கது.