காரைக்கால்: காரைக்காலில் காலரா பரவலுக்கு புதுச்சேரி அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், துச்சேரி அரசு இதனை ஒரு பேரிடராக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் அண்மை நாட்களாக ஏராளமானோர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, காலரா பரவல் சூழல் உருவாகியுள்ள நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 4) காரைக்கால் அரசு பொது மருதுவமனையில் வயிற்றுப் போக்கு மற்றும் காலராவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை நேரில் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார். நோய் பாதிப்பு ஏற்பட்ட விவரங்கள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் நகரம் மட்டுமல்லாது, விரிச்சிக்குடி, திருமலைராயன்பட்டினம், காரைக்கால் மேடு உள்ளிட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்தோர் என பல பகுதிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது காலரா பரவலாக உருவெடுத்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பே காரைக்கால் மேட்டில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வயிற்றுப் போக்கால் பலர் பாதிக்கப்பட்டனர்.
அப்போதிலிருந்தே உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். புதுச்சேரி அரசின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம். இதுவரை காரைக்கால் பகுதிக்கு புதுச்சேரி முதல்வர் வரவில்லை. காரைக்காலில் காலரா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். புதுச்சேரி அரசு இதனை ஒரு பேரிடராக அறிவித்து உரிய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டால் மட்டுமே இதனை விரைவாகக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.