மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோயில் யானை பார்வதிக்கு வயது 26. கடந்த 2000-ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த யானை கோயில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் பராமரிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே பார்வதி யானைக்கு இடது கண்ணில் வெண்புரை நோய் ஏற்பட்டு வலியால் துடித்து வருகிறது. கண்ணில் இருந்து நீரும் வழிந்ததால் பார்வதி யானை சோர்வடைந்த நிலையிலே உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரடியாக கோயிலுக்கு வந்து யானையை பார்வையிட்டு தமிழ்நாடு கால்நடைத் துறை அறிவியல் பல்கலைகழக சிறப்பு மருத்துவ அனுப்பி சிகிச்சை அளித்தார்.
அதன்பிறகும் கண்புரை நோயை குணப்படுத்த முடியாததால் தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகளுக்கென பிரேத்யேக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைகளை பெற்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினர். கடந்த வாரம் தாய்லாந்து கசிசார்ட் பல்கலைக்கழக மருத்துவக்குழுவினரே நேரடியாக வந்து ஆய்வு செய்து கால்நடை பராமரிப்பு துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
தற்போது பார்வதி யானைக்கு வெளியே அழைத்துச் செல்ல முடியாத அளவிற்கு கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பாமல் அவதியடைந்துள்ளது. அதனால், கோயில் திருவிழாக்களுக்கு முன்போல் பார்வதி யானையை பயன்படுத்தக்கூடாது என்ற முடிவுக்கு கோயில் நிர்வாகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ”பார்வதி யானைக்கு முழுமையாக பார்வை குறைபாடு ஏற்படவில்லை. இடது கண்ணில் 25 சதவீதம் பார்வையும், வலது கண்ணில் 75 சதவீதமும் இன்னும் பார்வை நன்றாக உள்ளது. அதனால், இந்த பார்வையே யானைக்கு போதுமானது. ஏனெனில் யானை கண்களை மட்டும் கொண்டு அல்லாது அதன் மற்ற உறுப்புகளை கொண்டும் துல்லியமாக செயல்படும்.
தற்போது யானைக்கு அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். மற்ற மருத்துவ சிகிச்சைகளை கொண்டே சரி செய்ய முயற்சிகள் நடக்கிறது. யானைகள் திருவிழாக்களில் பங்கேற்பது ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது பார்வதி யானைக்கு கண்ணில் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் கோயில் உள் பிகாரங்களில் நடக்கும் பூஜைகளை மட்டும் பங்கேற்க வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருவிழாக்களில் தற்போதைக்கு யானையை பயன்படுத்தக்கூடாது என திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
தமிழகத்தில் மட்டுமில்லாது நாடு முழுவதுமே கோயில்களில் பராமரிக்கப்பட்டு வந்த யானைகள் சில மதம் பிடித்து, அட்டகாசம் செய்தன. சில கோயில்களில் மதம் பிடித்த யானைகளால் பாகன்கள் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்திலே அதற்காகவே கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை சரணாலயத்தில் புத்துணர்வு முகாம் நடக்கிறது.
நமது கலாசாரத்துடனும் ஆன்மிகப் பாரம்பரியத்துடனும் மிகவும் ஒன்றி இரண்டறக் கலந்துள்ளது யானை. வேத, இதிகாச, புராணங்களில் ஆரம்பித்து தமிழக மன்னர்கள் வரை யானைகளை வளர்த்து பயன்படுத்தியுள்ளனர். கோயில் திருவிழாக்களில் உற்சவ மூர்த்திகளை சுமந்து வருவது, புண்ணிய தீர்த்தங்களைச் சுமந்து வருவது, ஊர்வலங்களில் கலந்து கொள்வது போன்ற பல்வேறு சம்பிரதாயங்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
யானைகள் இல்லாத கோயில்களில் அவற்றை வாடகைக்கு அமர்த்தி பயன்படுத்துவார்கள். தற்போது பார்வதி யானைக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளதால் அந்த யானையை திருவிழாக்களில் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.