சென்னையில் 5 அரசு பள்ளிகளில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கற்பிக்கும் வகையில், வி.ஆர். லேப் பயன்பாட்டை தொடங்கி வைத்துப் பேசிய உதயநிதி, உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் என்று தைரியமாக கேட்ட மாணவிகளை வியந்து பாராட்டிப் பேசினார்.
மாணவர்களின் கற்றல் ஆர்வம்-திறனை அதிகரித்திட, மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கற்பிக்கும் வகையில், மெட்டா கல்வி ( MetaKalvi) நிறுவனத்தின் உதவியுடன் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள 5 அரசு பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள VR LAB-ன் பயன்பாட்டை லேடிவில்லிங்டன் கல்லூரியில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஜூலை 4) தொடங்கிவைத்தனர்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது: “இப்போது இருக்கிற மாணவர்கள் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். நான் மேடையில் உட்கார்ந்திருக்கிறபோது, அருகே இருந்த சகோதரி (மாணவிகளிடம்) பெயர் கேட்டேன். ஒரு மாணவி கிறிஸ்டினா என்றார். இன்னொரு மாணவியிடம் பெயர் கேட்டேன். யாஸ்மின் என்று சொன்னார்.
“எத்தனையாவது படிக்கிறீங்கமா” என்று கேட்டேன். அதற்கு மாணவி, 8வது படிக்கிறார் என்று கூறினார். மாணவி கிறிஸ்டினா என்னிடம், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார்.
நான் “என் பெயர் உனக்கு தெரியாதாமா?” என்று கேட்டேன். மாணவி “தெரியாது” என்றார். “என் பெயர் உதயநிதிமா” என்றேன்.
அந்த மாணவி உடனே “உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன உறவு? என்ன சம்பந்தம்?” என்று கேட்டார். “நான் அவருடைய பேரன்மா?” என்று கூறினேன். அதற்கு மாணவி “அப்படியா சரி” என்று கூறினார்.
அந்த அளவுக்கு இந்த காலத்தில் குழந்தைகள் அவ்வளவு தெளிவாக, அவ்வளவு தைரியமாக பேசுகிறார்கள். சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்கான கல்வி, மாணவர்களுக்கான கல்வி கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதற்காக தலைவரின் இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. ஸ்டாலின் சமீபத்தில் கூட கூறினார். கல்வி அறிவை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம். இந்தியாவுக்கே ஒரு முன்னோடியான மாநிலமாக அனைத்திலும் வளர்ச்சியடைந்த மாநிலமாக நமது தமிழ்நாடு திகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால், அதற்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்கள் போட்ட விதைதான். தலைவர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி கல்விச் செல்வத்தை கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அதற்காக அனைவரும் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு பள்ளிக் கல்வித்துறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அன்பில் மகேஷ் சிறபாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், உதயநிதி, அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“