கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. சீமந்த் குமார் சிங்-கை விமர்சனம் செய்ததற்காக தன்னை இடமாற்றம் செய்வதாக மிரட்டல் விடப்பட்டுள்ளதாக நீதிபதி சந்தேஷ் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் நகர்ப்புற மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது நில தகராறு தொடர்பாக சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக மாவட்ட ஆணைய நீதிமன்றம் ஒப்பந்த ஊழியர் சேத்தன் மற்றும் உதவி தாசில்தார் மகேஷ் ஆகியோர் 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மாவட்ட ஆணையர் மஞ்சுநாத் கேட்டுக்கொண்டதால் தாங்கள் அவருக்காக லஞ்சம் வாங்கியதாக இருவரும் கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக மஞ்சுநாத் மீது விசாரணை நடைபெறாததை கண்டித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சத்தில் ஊறிப்போயுள்ளதாகவும் லஞ்சம் வாங்கும் சிறப்பு மையமாக செயல்படுவதாகவும் கூறியவர் இதற்கு தலைவராக கறைபடிந்த நபர் இருப்பது அதைவிட வெட்கக்கேடானது என்று காட்டமாக கூறினார்.
நீதிபதியின் இந்த கருத்தை தொடர்ந்து மாவட்ட ஆணையர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மஞ்சுநாத் இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மஞ்சுநாத் தொடர்ந்த ஜாமீன் தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத் துறை குறித்தும் அதன் தலைவர் குறித்தும் தான் கூறிய கருத்துக்காக தன்னை இடமாறுதல் செய்யப்போவதாக சக நீதிபதி என்னிடம் கூறினார்.
என்னை மிரட்டி பணியவைக்கப் பார்க்கிறார்கள் அது என்னிடம் நடக்காது நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் என்னிடம் எந்த சொத்தும் இல்லை என்மேல் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்காக நான் மேற்கொண்ட முயற்சியை கைவிட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் கூறினார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஒருவர் தான் மிரட்டப்படுவதாக பகிரங்கமாக கூறியதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் காண்ட்ராக்டர்கள் 40 சதவீதம் லஞ்சம் தரவேண்டி இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பல்வேறு லஞ்ச குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நீதிபதிகள் மிரட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.