Java, Python… 13 வயதில் 17 புரொக்ராம் மொழிகள்; அசத்தும் கோயம்பத்தூர் சிறுவன்!

பொதுவாக கணிப்பொறியியல் முடித்து பட்டம் பெற்ற மாணவர்களே ஜாவா, பைத்தான் போன்ற கணினி புரொக்ராம் மொழிகளைத் திறம்படக் கற்றுக்கொள்வதில் திணறி வருகின்றனர். அதிலும் ஒரு புரொக்ராம் மொழியைக் கற்றுக்கொள்ளவே பல மாதங்கள் செலவழித்து அதற்கெனப் பிரத்யேகமாக நேரடி வகுப்புகளுக்குச் சென்று பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த 13 வயதான அர்னவ் சிவ்ராம் ஜாவா, பைத்தான் உட்பட 17 கணினி புரொக்ராம் மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். நான்காம் வகுப்பு படிக்கும் போதே கணினி, மொபைல் போன்ற சாதனங்கள் மீது ஆர்வம் கொண்ட அர்னவ், பெற்றோரின் சரியான வழிகாட்டுதலால் மென்பொறியியல் சார்ந்த புரொக்ராம் மொழிகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

பின்னர் ஆர்வத்துடன் இவற்றை முறையாகக் கற்றுக்கொண்டவர், தற்போது 17 கணினி புரொக்ராம் மொழிகளைத் தனது விரல் நுனியில் வைத்துள்ளார். அர்னவ் மட்டுமல்ல அவரைப் போல இன்னும் சில குழந்தைகளும் புரொக்ராம் மொழிகளைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்துள்ளனர். இவரைப் போலவே பலர் சிறுவயது முதல் ஆர்வத்துடன் மென்பொறியியல் சார்ந்த படிப்புகளையும் கணினி புரொக்ராம் மொழிகளையும் கற்று வருகின்றனர்.

இது பற்றிப் பேசிய அர்னவ் சிவ்ராம், “13 வயதில் 17 கணினி மொழிகளைக் கற்றுக்கொண்ட சிறுவயது குழந்தைகளில் நானும் ஒருவன். எதிர்காலத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றுவதே எனது கனவு. குறிப்பாக இந்தியாவில் ஆட்டோ பைலட்டுக்கான செயற்கை நுண்ணறிவைக் குறைந்த முதலீட்டில் உருவாக்குவதே எனது எதிர்காலத் திட்டம்” என்றார்.

13 வயதிலேயே இத்தனை புரொக்ராம் மொழிகளைக் கற்ற அர்னவ் சிவ்ராமின் திறமையை அனைவரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.