எரிபொருளை கொள்வனவு செய்தல்இ மற்றும் விநியோகத்தின் முன்னுரிமை ஆகிய விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஜூலை 12 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இன்று (04) உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (04) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனை மற்றும் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது.
நீதியரசர்களான விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் பிரதமர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை மற்றும் 37 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றத்தினால் பொது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் மனுவில் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.