கோவை: விக்ரம் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவிமான வானதி சீனிவாசன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி,சூர்யா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘விக்ரம்’. கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 400 கோடி வசூலை எட்டியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஜூலை 8-ம் தேதி டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தை பார்த்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் வானதி சீனிவாசன். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். இவர்களின் போட்டியால் தமிழகத்தின் நட்சத்திர சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக அமைந்தது கோவை தெற்கு தொகுதி. மேலும், தேர்தல் பிரசாரத்தில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை பரபரப்பாகவே இருந்தது அந்த தொகுதி.
இறுதியில் கமல்ஹாசனை தோற்கடித்து கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார் வானதி. இதையடுத்தே, “தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் வானதி.