சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில் நடந்த சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்கா உருவான 246வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. அதனொரு பகுதியாக வாஷிங்டன் டி.சி.யில் தேசிய சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு தொடங்கியது. தொடங்கிய 10 நிமிடத்தில் அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஊடகங்களில், ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் உலா வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இந்த அணிவகுப்பில் குறைந்தது 25 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இல்லினாய்ஸ் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 37 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இதுவரை 6 பேர் பலியான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என்று இல்லினாய்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் வயது 18 – 20 வரை இருக்கும் என்றும், அவர் ஒரு கட்டிடத்தில் நின்று கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் இல்லினாய்ஸ் காவல்துறை தகவல் கூறியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அமெரிக்காவில் 246வது ஆண்டு தினக் கொண்டாட்டங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் எனத் தெரிகிறது.