“தி.மலையில் கருணாநிதி சிலை நிறுவுவதற்கு எதிராக ஆன்மிகப் போராட்டம்” – எச்.ராஜா ஆவேசம்

திருவண்ணாமலை: “திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதியின் சிலை வைப்பதற்கு எதிராக அனைத்து ஆன்மிக சக்திகளையும் இணைத்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்” என்று பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் (ஈசான்ய மைதானம் அருகே) முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த இடத்தை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று (4-ம் தேதி) பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை வைப்பது என்பது இந்துக்களை அவமதிக்கும் செயலாகும். சிலை அமைய பெற்றுள்ள இடத்துக்கு 92 சதுரடி மட்டுமே பட்டா உள்ளன. ஆனால், 250 சதுர அடிக்கு பட்டா உள்ளது வருவாய் துறை அதிகாரிகள் சான்று கொடுத்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு, 92 சதுர அடி என மாற்றி உள்ளனர். 250 சதுரடி என மாற்றிய வருவாய் துறை அதிகாரியை ஏன் கைது செய்யவில்லை?

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஏவி விட்டதால், எதையும் செய்வேன் என்று செயல்படுபவர் அரசு ஊழியர் அல்ல, அவர் எ.வ.வேலு ஊழியராவார். அரசு ஊழியர் என்பதை நினைத்து செயல்பட வேண்டும். 250 சதுர அடி பட்டா இடம் என மாற்றிய வருவாய் துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

அனைத்து ஆன்மிக சக்திகளையும் இணைத்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி வளாகத்தில் கருணாநிதியின் சிலையை வைத்துக்கொள்ளலாம். ஏன் கிரிவல பாதையில் வைக்க வேண்டும்?

அண்ணாமலையார் பூமியில் அண்ணாதுரை பெயரில் நுழைவு வாயில் அமைப்பது ஏன்? உடனடியாக, அண்ணாமலையார் நுழைவு வாயில் என மாற்ற வேண்டும். கிரிவல பாதையில், கோயில் இடங்களை ஆக்கிரமித்து கடைகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த பவுர்ணமிக்கு முன்பாக, கிரிவல பாதையில் கோயில் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது.

தேவகவுடா, நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, மாயாவதி, பழனிசாமி, பன்னீர்செல்வம், ராமதாஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு, ஒன்றரை மடங்கு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்” என்று எச்.ராஜா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.