மும்பை: மகாராஷ்டிர மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே கொலை வழக்கில், அவரது நெருங்கிய முஸ்லிம் நண்பர் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் உமேஷ் கோல்கே (54), கால்நடை மருந்து கடை நடத்தி வந்தார். இவரை கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு 2 பேர் வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உமேஷின் நெருங்கிய முஸ்லிம் நண்பர் யூசுப் கான் கொலைக்கு சதி திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து வழக்கை விசாரிக்கும் என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது:
கால்நடை மருந்து கடை நடத்தி வந்த கோல்கே, கால்நடை மருத்துவர்களை ஒன்றிணைத்து வாட்ஸ் அப் குழுவை நடத்தி வந்தார். இதில் கால்நடை மருத்துவர் யூசுப் கானும் இருந்துள்ளார்.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை, உமேஷ் கோல்கே தனது வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்தார். இதை கவனித்த கால்நடை மருத்துவர் யூசுப் கான், தனது சமுதாய மக்களிடம் கோல்கேவின் நுபுர் சர்மா ஆதரவு நிலைப்பாட்டை தெரியப்படுத்தினார். அதோடு கோல்கே எப்போது எங்கிருப்பார், அவரை எங்கு கொலை செய்யலாம் என்பது குறித்து கொலையாளிகளுக்கு ரகசியமாக திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். இதன்படியே கொலை அரங்கேறியுள்ளது.
மருந்து கடை உரிமையாளர் உமேஷ் கோல்கேவும் கால்நடை மருத்துவர் யூசுப் கானும் மிகநெருங்கிய நண்பர்கள். இருவரும் 16 ஆண்டுகள் நட்பாக பழகியுள்ளனர். தொழில்முறை உறவை தாண்டி குடும்ப ரீதியாக நட்பு பாராட்டி வந்தனர். யூசுப் கானின் மகள் படிப்பு, திருமணத்துக்கு கோல்கே தாராளமாக பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். அந்த நன்றியை மறந்து நண்பனை கொலை செய்ய யூசுப் கான் சதித்திட்டம் தீட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “கடந்த ஆட்சியில் உமேஷ் கோல்கே வழக்கை வழிப்பறி, கொலை கோணத்தில் விசாரித்தனர். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகே கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து என்ஐஏ விசாரணை நடத்துகிறது” என்று தெரிவித்தார்.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த தையல்காரர் கன்னையா லால் டெனி (40) அண்மையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதே பாணியிலேயே மகாராஷ்டிராவின் அமராவதியை சேர்ந்த உமேஷ் கோல்கேவும் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
வடமாநிலங்களில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் பலர் சமூக வலைதளங்களில் மன்னிப்பு கோரி வருவதாகக் கூறப்படுகிறது. பலர் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் குடியேறி வருகின்றனர்.