புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து போலி வீடியோ பதிவிட்டது தொடர்பாக பாஜ எம்பிக்கள் ராஜ்யவர்த்தன் சிங் ரதோர் ம்றறும் சுப்ராத் பதவ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு எம்பி அலுவலகம் தாக்குதல் சம்மந்தமாக பேசிய கருத்தை உதய்பூரில் நடந்த கொலையுடன் தொடர்புபடுத்தி பாஜ எம்பியும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 2 பாஜ எம்பிக்கள் மற்றும் 3 பேர் மீது சட்டீஸ்கரில் உள்ள பிலஸ்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் பாஜ எம்பிக்கள் ராஜ்யவர்த்தன் சிங் ரதோர் மற்றும் சுப்ராத் பதவ் உட்பட 5 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் டெல்லி, ஜார்கண்ட், மகராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேராவில் காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் போலி வீடியோ தொடர்பாக பாஜ தலைவர் ஜேபி நட்டாவிற்கு கடிதம் எழுதி இருந்தார். ராகுலுக்கு எதிராக பொய் செய்தி பரப்பிய பாஜ தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் டிவிட்டரில் இருந்து வீடியோவை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.