மதுராந்தகம்: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுராந்தகத்தை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் நாய்கடி மற்றும் பாம்புக்கடிக்கு மருந்துகள் உள்ளனவா என கேட்டறிந்தார்.
முன்னதாக, முதலியார் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் 37.46 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 1 கோடியே 8 லட்சத்து 21 ஆயிரத்து 530 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர்.
வரும் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்க உள்ளன. இதில், இதுவரை முதல் மற்றும் 2-ம் தவணை போடாத அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு வருபவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அக்கட்சி தலைமைக்கு உள்ளது. கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி, தனிமனித இடைவெளி விட்டு உட்காரவைத்து அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதை அவர்கள் செய்வார்கள் என கருதுகிறோம் என்றார்.