வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மூணாறு,-கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இருவர் இறந்தனர். ஒருவர் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மூன்று நாட்களாக பலத்த மழை பெய்த நிலையில் வானிலை ஆய்வு மையம் நாளை (ஜூலை 6) வரை கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இருவர் பலி
ஏலப்பாறை அருகே கோழிக்கானம் ஏலத்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மண் சரிந்து விழுந்து தொழிலாளி பாக்கியம் 58, என்ற பெண் இறந்தார். சமையல் வேலையில் ஈடுபட்டபோது மண்சரிந்து சமையலறை மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பாக்கியம் இறந்தார்.மூணாறு அருகே வெள்ளத்தூவல் முதுவான்குடியில் கட்டுமான பணிகளிடையே நேற்று மதியம் 3:30 மணிக்கு மண் திட்டு விழுந்தது. முதுவான்குடி பவுலோஸ் 56, இறந்தார்.
ஆற்றுவெள்ளத்தில் மாயம்
அடிமாலி அருகே மச்சிப்பிளாவ் பகுதியைச் சேர்ந்த அகில் 22, உள்பட நால்வர் தேவியாறு ஆற்றில் நேற்று முன்தினம் மீன் பிடித்தனர். கால் தவறி ஆற்றில் விழுந்த அகில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடுகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
கொச்சி — தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கல்லார் பகுதியில் நேற்று காலை பாறைகள் விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அதே வழித்தடத்தில் அடிமாலி சீயப்பாறை நீர்வீழ்ச்சி அருகே மரம் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது. நெடுங்கண்டம் அருகே பாறைதோடு, காஞ்சியாறு பகுதிகளில் மரம் சாய்ந்தும், மண்சரிந்தும் 4 வீடுகள் சேதமடைந்தன. நெடுங்கண்டம் அருகே தூக்குப்பாலம், பாலகிராமம், கல்லார்- மாங்குளம் ரோட்டில் பீச்சாடு பகுதிகளில் மின்கம்பிகள் மீது மரம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு அறை திறப்பு
மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம், தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன
Advertisement