புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் கியான்வாபி மசூதி மீதான வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் துவங்கியது. இதில் முஸ்லீம்கள் தரப்பில் நடைபெற்ற வாதம் ஜுலை 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்காரி கவுரி அம்மனை தரிசிக்கும் வழக்கில் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கிற்கு தடை கேட்டு மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதற்கு அடிப்படையாக மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ஐ சுட்டிக் காட்டியிருந்தனர்.
இதை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்குள் மே 16-ல் மசூதியினுள் களஆய்வு நடத்தப்பட்டுவிட்டது. இதில், அங்கு ஆதி விஷ்வேஸ்வர் கோயில் இருந்ததற்கான முக்கிய ஆதாரமாக ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்தது. இதற்கு சிவில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட சீல் சரி எனக் கூறிய உச்ச நீதிமன்றம், மசூதியினர் கேட்ட தடையை மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதில் இந்துக்கள் தரப்பின் வாதம் முடிந்த நிலையில், முஸ்லிம்களின் வாதத்திற்காக கோடை விடுமுறைக்கு பின் ஜுலை 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முஸ்லீம்களின் வாதத்தை அவர்களது வழக்கறிஞரான அபய்நாத் யாதவ் நேற்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் முன் வைத்திருந்தார். இதில், முன்வைக்கப்பட்ட 52 முக்கிய அம்சங்களில் 39-ல் இந்துக்கள் தரப்பு தமது ஆட்சேபங்களை தெரிவித்திருந்தது. இதை விசாரித்த அதன் நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வாஸ், வழக்கை மீண்டும் ஜுலை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
கியான்வாபி மசூதியின் ஒசுகானாவில் கிடைத்த சிவலிங்கத்தை தரிசிப்பது உள்ளிட்ட மேலும் 3 மனுக்கள் வாரணாசி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருந்தன. விரைவு நீதிமன்றத்தில் அந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி மீது மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த மசூதியானது அங்கிருந்த கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை இடித்து கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது. இதன் மீதான ஏழு மனுக்கள் மதுராவின் நீதிமன்றங்களில் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 2 மனுக்கள் இன்று (ஜூலை 5) விசாரிக்கப்பட உள்ளன. மீதம் உள்ள ஐந்து மனுக்கள் ஜுலை 15-ல் விசாரணை செய்யப்பட உள்ளன. இவை அன்றி மேலும் ஒன்பது மனுக்கள் ஷாயி ஈத்கா மசூதி தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.