வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: காலரா பரவி வரும் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்திட மருத்துவக் குழுவை மத்திய சுகாதாரத் துறை அனுப்பி வைக்க வேண்டும் என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் வையாபுரி மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:
காரைக்காலில் சுத்தமான குடிநீர் வழங்க அரசு தவறிவிட்டது. கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் மக்கள் காலராவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, இருவர் இறந்துள்ளனர். அதை மூடி மறைக்கும் வகையில், இணை நோய்களால் இறந்ததாக சுகாதாரத்துறை கூறுவது கண்டிக்கத் தக்கது.
மாவட்டத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாத நிலைக்கு அரசு தள்ளி உள்ளது. இதற்கு அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம். காரைக்கால் மாவட்ட மக்களை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. காலரா பரவிய இரு நாட்களுக்கு பிறகு, பொதுப்பணி துறை அமைச்சர் மட்டும் காரைக்கால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மாவட்டமே சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ள நிலையில் முதல்வர் சென்று ஆய்வு, நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. சுகாதாரத் துறை முற்றிலுமாக செயலிழந்து விட்டது. இறப்புகளையும், பாதிப்புகளையும் மூடி மறைக்க நினைக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை காரைக்காலில் நிலவுகிறது.எனவே, மத்திய சுகாதாரத் துறை போர்க்கால அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். காலராவால் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கும் புதுச்சேரி தரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement