இந்திய நிகழ்வுகள்
கர்நாடகா ஏ.டி.ஜி.பி., அம்ரித் பால் கைது; எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில் அதிரடி
பெங்களூரு-கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அம்ரித் பால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 545 போலீஸ் எஸ்.ஐ., பதவிகளுக்கு 2021 அக்டோபர் 30ல் எழுத்து தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் இந்தாண்டு ஜனவரி 18ல் வெளியானது. இதில், கலபுரகி, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திடுக்கிடும் தகவல்
பா.ஜ., காங்கிரஸ் பிரமுகர்கள், முறைகேடுக்கு துணை போன போலீஸ் அதிகாரிகள் என பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. ‘புளூடூத்’ உபகரணம் பயன்படுத்தி தேர்வு எழுதியது, விடைத்தாள் திருத்தியது, என விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
ஒவ்வொருவரிடமும் 70 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, முகவர்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.போலீஸ் நியமன பிரிவின் டி.எஸ்.பி., சாந்தகுமார், தலைமை ஏட்டு ஸ்ரீதர், முதல் நிலை ஊழியர் ஹர்ஷா ஆகியோரிடம் நடந்த விசாரணையில், நியமன பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அம்ரித் பால் உத்தரவின்படி, முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அம்ரித் பால், உடனடியாக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரிடம் மூன்று முறை விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடைசியாக ஜூன் 30ல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள், அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ஜூலை 7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி சந்தேஷ், சி.ஐ.டி., போலீசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்நிலையில், அம்ரித் பால் நான்காவது முறையாக நேற்று சி.ஐ.டி., அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். விசாரணை முடிந்ததும் அவர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் டி.எஸ்.பி., சாந்தகுமார் உள்ளிட்ட மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.பின், நால்வரும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அம்ரித் பாலை வரும் 13ம் தேதி வரையும், மற்றவர்களை 8ம் தேதி வரையும், சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், நேற்று வரை, 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்ரித் பால் பின்னணி
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அம்ரித் பால், 1995ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பேட்சை சேர்ந்தவர். எஸ்.ஐ., தேர்வு விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த கருவூலத்தின் சாவி, இவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 25 பதவிகளுக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசி, மற்ற அதிகாரிகளிடம் விடைத்தாள் திருத்துவதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது.
நாய் குரைத்ததால் தகராறு; 3 பேருக்கு சரமாரி அடி
புதுடில்லி-புதுடில்லியில் வளர்ப்பு நாயை அடித்ததால் ஏற்பட்ட தகராறில், இரும்புத் தடியால் தாக்கியதில் மூன்று பேர் காயம் அடைந்தனர்.புதுடில்லியின் மேற்கு பகுதியில் உள்ள பாஸ்சிம் விஹார் பகுதியில் வசிப்பவர் தரம்வீர் தாஹியா. இவர், நேற்று முன்தினம் காலையில் தன் வீட்டருகே உள்ள தெருவில் நடந்து சென்றார். அப்போது, பக்கத்து வீட்டுக்காரர் ரக்ஷித் என்பவர் வீட்டில் இருக்கும் வளர்ப்பு நாய், தாஹியாவை விரட்டிச் சென்று குரைத்து பின் கடித்தது. இதையடுத்து, தாஹியா இரும்புத் தடியால் நாயை சரமாரியாக தாக்கினார். தன் நாயைக் காப்பாற்ற ஓடிவந்த ரக்ஷித்துக்கும், தாஹியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தாஹியா இரும்புத் தடியால் ரக்ஷித் மற்றும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் ஹேமந்த், ரேணு என்கிற பெண் ஆகியோரையும் சரமாரியாக தாக்கினார்.காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நாய் கடித்த தாஹியாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரக்ஷித் கொடுத்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஹிமாசல பஸ் விபத்தில் 16 பேர் பலி
ஹிமாச்சல பிரதேசத்தில் மலைப்பகுதியில் சென்ற தனியார் வாகனம் உருண்டு விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டம் ஷைன்செர் என்ற இடத்தில் இருந்து சைன்ஜி என்ற இடத்திற்கு, மாணவர்கள் உள்ளிட்ட சிலரை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று, நேற்று காலை 8:00 மணிக்கு சென்றது.மலைப்பாதையில் ஊசி வளைவில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 16 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் ராகுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துஉள்ளனர்.உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மகளை கொலை செய்ய முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ., கைது
பாட்னா-பீஹாரில், காதல் திருமணம் செய்த மகளை கவுரவப் படுகொலை செய்ய முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ.,வை போலீசார் கைது செய்தனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, சரன் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரா சர்மா, 1990களில் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏ., வாக பதவி வகித்தார்.இவரது மகள், வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதில், சுரேந்திரா சர்மாவுக்கு உடன்பாடு இல்லை.
இதனால், பெற்ற மகளை படுகொலை செய்ய திட்டமிட்ட அவர், சோட்டே சர்கார் என்ற கூலிப்படை நபருக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்து மகளை கொல்ல உத்தரவிட்டார்.இந்நிலையில், தலைநகர் பாட்னா அருகே வசிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகளை, சோட்டே சர்கார் சமீபத்தில் சுட்டார். குறி தவறியதால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சோட்டே சர்காரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுரேந்திரா சர்மா கைது செய்யப்பட்டார்.
தமிழக நிகழ்வுகள்
தூங்கிய பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு
திருவெண்ணெய்நல்லூர் : வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கஞ்சனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி திவ்யா, 23; இவர், தனது தாய் வீடான பனப்பாக்கம் கிராமத்திற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது வீடு புகுந்த மர்ம நபர், திவ்யாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஐ.டி., ஊழியர் கொலை: கார் ஓட்டுனர் கைது
திருப்போரூர் : காரில் செல்வதற்கான ‘ஓ.டி.பி.,’ எண் தெரிவிப்பதில் தகராறு ஏற்பட்டதால், ஐ.டி., ஊழியரை, ஓட்டுனர் கொலை செய்தார்.செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமேந்தர், 33; கோவையில் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை, கன்னிவாக்கம் வந்த உமேந்தர், நேற்று முன்தினம் மாலை சினிமா பார்ப்பதற்காக, குடும்பத்துடன் தயாரானார்.கன்னிவாக்கம் வீட்டிலிருந்து மனைவி பவ்யா, குழந்தைகள் அக்ரேஷ், கருண், மனைவியின் சகோதரி தேவிப்ரியா, அவரது குழந்தைகள் உட்பட ஏழு பேர், ஓ.எம்.ஆர்., சாலை ஏகாட்டூரில், தனியார் ஷாப்பிங் மாலுக்கு சென்றனர்.படம் பார்த்து வீடு திரும்புவதற்காக, மனைவியின் சகோதரி தேவிப்ரியாவின் மொபைல் போனில் இருந்து தனியார் நிறுவன வாடகை காருக்கு ‘புக்கிங்’ செய்தார்.சிறிது நேரத்தில், ‘இன்னோவா’ கார் வந்ததும் அனைவரும் காரில் ஏறினர்.
சேலம் அடுத்த ஆத்துாரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ரவி, 41, ‘புக்கிங்’ செய்ததை உறுதிப்படுத்த ஒரு முறை பயன்படக்கூடிய ஓ.டி.பி., எண்ணை கேட்டார்.மொபைல் போனில் ஓ.டி.பி., எண்ணை தேடி கொண்டிருந்த நேரத்தில், கோபமடைந்த ஓட்டுனர் ரவி, ”ஓ.டி.பி., வரவில்லை என்றால், காரை விட்டு இறங்குங்கள்,” என்றார். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
ஓட்டுனர் தாக்கியதில், உமேந்தர் மயங்கி விழுந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, பரிசோதனை மருத்துவர்கள், உமேந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதற்கிடையில் தப்பிச்செல்ல முயன்ற கார் ஓட்டுனர் ரவியை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வெளிவட்ட சாலையில் ‘பைக் ரேஸ; விபத்து அச்சத்தில் பயணியர்
சென்னை : விடுமுறை நாட்களில், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வெளி வட்டச்சாலையில் நடக்கும் ‘பைக் ரேஸ்’களால், பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்து அபாயம் நிலவுவதாக, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வண்டலுார் – -மீஞ்சூர் வெளிவட்டச்சாலையில், சென்னை மற்றும் எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் பயணிக்கின்றன.
தவிர, கார்கள், இருசக்கர வாகன போக்கு வரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சாலையில், வார விடுமுறை நாட்களில் ரேஸ் ரோமியோக்கள் சிலர், ‘பைக், ஆட்டோ ரேஸ்’ நடத்துவது அதிகரித்துள்ளது.ரேஸ் நடக்கும் சமயத்தில், அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
இதனிடையே, பூந்தமல்லி சுங்கச்சாவடி அருகே நேற்று, பழைய பைக்குகளின் அணிவகுப்பு நடந்தது. இதில் பங்கேற்றோர், தங்கள் பைக்குகளை வேகமாக இயக்கினர். மீஞ்சூர் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகேயும், பலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த சாகசங்களை மொபைல் போன்களில் படம் பிடித்து, அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இதுபோன்ற அபாயகரமான செயல்களால், சாதாரண பொதுமக்கள் விபத்தில் சிக்கி, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபோன்ற அபாயகரமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, போக்குவரத்து காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதியவர் கொலை: பழங்குடியினர் மறியல்
பள்ளிப்பட்டு : பழங்குடியின முதியவர் தற்கொலைக்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 100க்கும் மேற்பட்டோர் திருத்தணியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பள்ளிப்பட்டு அடுத்த, கீளப்பூடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 80. பழங்குடி இனத்தை சேர்ந்த இவர், நேற்று அதிகாலை, பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகம் நுழைவு வாயிலில் உள்ள கல்வெட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, உடலை பள்ளிப்பட்டு போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்ட பெரியசாமி, பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தார்.கடந்தாண்டு, அக்., 10ல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தின் போது, பழங்குடியினருக்கு ஜாதி சான்று வழங்க கோரி, கழுத்து அறுத்து, தற்கொலைக்கு முயன்றார்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி, பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் பிரச்னை தொடர்பாக, தாசில்தாரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, பெரியசாமி அவமானப்படுத்தப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும், தகவல் பரவியது. இதையடுத்து, பழங்குடியின பிரிவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு மருத்துவமனை முன் குவிந்தனர்.
அவர்கள், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ‘பெரியசாமி தற்கொலைக்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்’ என, கோஷம் எழுப்பினர். திருத்தணி கோட்டாட்சியர் ஹசத்பேகம், திருத்தணி ஏ.எஸ்.பி., சாய்பிரணீத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் பேசினர். பின் ‘பெரியசாமிதற்கொலைக்குகாரணமான தாசில்தார் உட்பட வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;
பெரியசாமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஜாதி சான்றுகள் வழங்க வேண்டும்’ என, கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற கோட்டாட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
உலக நிகழ்வுகள்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 6 பேர் பலி
சிகாகோ: அமெரிக்காவில், சுதந்திர தின அணிவகுப்பின் போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 6 பேர் பலியாயினர். 37 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா உருவானதன் 246வது ஆண்டுவிழா, அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிகாகோவில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில், சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சி துவங்கிய 10 நிமிடத்தில், மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினார். இந்த சம்பவத்தில், 6 பேர் பலியாயினர்; 37 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபர்ட் கிரமோ (வயது 22) எனவும், அருகேயிருந்த கட்டடம் ஒன்றின் மேல் நின்றவாறு அவர் சுட்டதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.