ஹைத்ராபாத்: தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து, கொள்ளையர்கள் நகைகளையும், பணத்தையும் அள்ளிச்சென்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பூசாப்பூரில், தெலுங்கானா கிராமிய வங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த வங்கியில், கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டது. நேற்று வழக்கம் போல், அதிகாரிகள் வங்கியை திறப்பதற்காக வந்தபோது, வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த வங்கி லாக்கர் கேஸ் கட்டர் மூலம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதும், லாக்கரை உடைக்க கேஸ் கட்டர் பயன்படுத்தியபோது, அதில் இருந்த ரூ.7 லட்சம் பணம் தீயில் எரிந்து சாம்பலாகியதும் தெரியவந்தது.மேலும், வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதோடு, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பாதுகாப்பு அலாரத்தின் கருவியிலுள்ள இணைப்பை துண்டித்து, பின் லாக்கரை உடைத்து நகைகளை அள்ளிச்சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட லாக்கரில் அருகில் பெரிய லாக்கர் ஒன்றும் உள்ளது. அதனை கொள்ளையர்கள் திறக்காமல் சென்றதற்கு காரணம், கேஸ் கட்டரில் இருந்த சிலிண்டர் காலியானதா? அல்லது தீ பிடித்ததால் காவல்துறைக்கு தகவல் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்திலா? என்பது குறித்து தெரியாத நிலையில், உடைக்கப்படாத பெரிய லாக்கரில், ரூ.6 கோடி மதிப்பிலான தங்கநகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த நிஜாமாபாத் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.