பீமவரம்: பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னவரம் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது சில கருப்பு பலூன்கள் வானத்தில் பறந்து வந்து ஹெலிகாப்டர் அருகே நெருங்கின. இந்த கருப்பு பலூன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பறந்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நேரத்தில் விமான நிலையம் அருகே சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். போலீஸார் விரைந்து சென்று அங்கிருந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் காங்கிரஸை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு
விஜயவாடா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜீவ் ரத்தன் தலைமையில் போராட்டம் நடந்துள்ளது. போலீஸாரை பார்த்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி தெரிவித்தார்.
பிரதமர் மோடி வந்திறங்கிய ஹெலிகாப்டருக்கு சற்று தொலைவில்தான் பலூன்கள் பறந்தன. இதில் பாதுகாப்பு பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. எனினும் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கருப்பு பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டதை பாஜகவினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.