கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கூறி, ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து, வருகின்ற 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், அது உட்கட்சி விவகாரம் என்றும் தெரிவித்தது. மேலும் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு மட்டுமே முந்தைய உத்தரவுகள் செல்லும் என்றும் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு இது செல்லாது என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி இடம் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழுவுக்கு தடை கோரி மனு அளித்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ளதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்தது என்றும், பொதுக்குழுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வேண்டும் என்றும் அந்த முறையிட்ட மனுவில் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படை சிறை பிடித்தது குறித்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ்க்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொது குழுவில் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்க போவதில்லை என்று, ஓபிஎஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பொதுக்குழுவில் பங்கேற்க கோரி பொருளாளர் எனக் குறிப்பிட்டு ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.