மெக்கா: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இனி தமிழிலும் அரஃபா உரை வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெக்காவின் தலைவர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் கூறும்போது, “மதினா, மெக்காவின் வளர்ச்சிக்கும், சேவைக்கும் சவுதி அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. அரஃபா உரை மொழிபெயர்பு இந்த வருடம் ஐந்தாவது வருடத்தில் நுழைந்துள்ள நிலையில், இத்திட்டம் 14 மொழிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பெர்சியன், சீன மொழி, துருக்கிய மொழி, ஸ்பெனிஷ் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதில் தமிழ், வங்காளம் போன்ற மொழிகளும் இணைந்துள்ளன.
அரஃபா உரை மொழிபெயர்ப்பு என்பது உலகத்திற்கான ஒரு பரந்த திட்டமாகும், குறிப்பாக புனிதத் தலங்களுக்கு வருபவர்கள், அரபு அல்லாத மொழி பேசுபவர்கள் தங்கள் தாய்மொழியில் கேட்க உதவுகிறது. இத்திட்டம் சுமார் 20 கோடி பேருக்கு பயனளிக்கும்.
யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவை செய்ய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இஸ்லாத்தின் நிதானம் மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய செய்தியை உலகிற்கு தெரிவிக்க தலைமை ஆர்வமாக உள்ளது. அதன் பொருட்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாத்ரீகர்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மன்னர் சல்மான் எப்போதும் வலியுறுத்துவார், மேலும் இந்த பணியை தொடர்வதில் சவுதி அரேபியா எப்போதும் பெருமிதம் கொள்ளும்” என்றார்.