கஜா புயலில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த மாணவர் வாட்ஸ் அப் மூலம் ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிய வீடு கட்டப்பட்டு, மாணவரின் குடும்பத்தினரிடம் ஆட்சியர் நேற்று ஒப்படைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(47). இவரது கணவர் இறந்துவிட்டார். இவரது மகன் வேல்முருகன் பிளஸ் 2 முடித்துவிட்டு, தஞ்சாவூரில் உள்ள அரசுக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் இவர்களின் கூரை வீடு முற்றிலும் சேதமடைந்தது. இதனால், சேதமடைந்த கூரை வீட்டிலேயே வேல்முருகன், அவரது தாயார் மற்றும் பாட்டி ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தங்களின் நிலை குறித்து மாணவர் வேல்முருகன் தகவல் தெரிவித்து, உதவி கோரியுள்ளார். இதையடுத்து, வடக்கூர் கிராமத்துக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சென்று, மாணவரின் இருப்பிடத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாணவர் வசித்து வந்த வீட்டின் அருகில், சிறிய அளவில் அவர்களுக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதில், பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆட்சியர் ஏற்பாடு செய்தார். இதில் கிடைத்த மானியம் ரூ.1.80 லட்சத்துடன், தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மதர் தெரசா அறக்கட்டளை மூலம் ரூ.3.70 லட்சம் கிடைக்கவும் ஆட்சியர் பரிந்துரைத்தார்.
இதையடுத்து, அந்தத் தொகையில் வீடு கட்டி முடிக்கப்பட்டு, மாணவர் வேல்முருகனின் குடும்பத்தினரிடம் புதிய வீட்டை ஒப்படைக்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து, வீட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மதர் தெரசா அறக்கட்டளைத் தலைவர் சவரிமுத்து, வேல்முருகனின் பட்டப் படிப்புக்கான செலவை அறக்கட்டளை ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஒரத்தநாடு வட்டாட்சியர் சீமான், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் இவர்களின் கூரை வீடு முற்றிலும் சேதமடைந்தது. இதனால், சேதமடைந்த கூரை வீட்டிலேயே வேல்முருகன், அவரது தாயார் மற்றும் பாட்டி ஆகியோர் வசித்து வந்தனர்