அறிவார்ந்த சமூகம் போரை ஆதரிக்காது என உக்ரைன் தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ரஷ்ய பத்திரிகையாளர் மனநல மருத்துவமனையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. பல பகுதிகள் ரஷ்ய துருப்புகளால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீண்டுவர பல காலங்களாகும் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டிவருகின்றனர்.
மேலும், சர்வதேச நெருக்கடிகளை ரஷ்யா தொடர்ந்து சமாளித்தும் வருகிறது.
இதனிடையே பைத்தியக்காரர்கள் தான் போரை ஆதரிப்பார்கள், அறிவார்ந்த சமூகம் வெறுக்கும் என சமூக ஊடகத்தில் பதிவிட்ட ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் சைபீரிய மனநல மருத்துவமனையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
44 வயதான Maria Ponomarenko என்பவரே உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விளாடிமிர் புடினின் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக போலியான தகவலை பரப்புவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
Maria Ponomarenko மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
அல்லது, ஆயுள் முழுக்க அவர் மனநல மருத்துவமனையில் அடைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய பணக்காரர்களில் ஒருவரும், ஜனாதிபதி புடினை விமர்சித்ததால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவருமான Mikhail Khodorkovsky தெரிவிக்கையில், சோவியத் காலகட்டம் தற்போது ரஷ்யாவில் அமுலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.