கவிஞராகவும், ஆவணப்பட இயக்குநராகவும் அறியப்படும் லீனா மணிமேகலை பல ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார். அவர் தற்போது காளி என்ற டெலி ஃபிலிம் இயக்கியிருக்கிறார். அதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு, கையில் LGBTQ+ சமூகத்தின் பிரைட் கொடியைப் பிடித்திருப்பதாக இருந்தது.
இதற்கு, பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், லீனா மணிமேகலையைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஒருபுறம் எதிர்ப்பு என்றால், மறுபுறம் அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா காளி தேவி சிகரெட் புகைப்பது போன்ற திரைப்பட போஸ்டர் சர்ச்சை தொடர்பாக, இந்தியா டுடே கான்க்ளேவ் ஈஸ்ட் 2022-ன் 2-வது நாளில் பேசினார். அப்போது அவர், “காளி என்னைப் பொறுத்தவரை இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்.
உங்கள் தெய்வத்தை கற்பனை செய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. சில இடங்களில் கடவுள்களுக்கு மது வழங்கப்படும், வேறு சில இடங்களில் அது தெய்வ நிந்தனையாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் சிக்கிம் சென்றால் அங்கே காளி தேவிக்கு மதுவை பிரசாதமாக கொடுப்பதைக் காண்பீர்கள். ஆனால் நீங்கள் உத்தரப்பிரதேசத்திற்குச் சென்று மது பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் அவர்கள் அதை நிந்தனை என்று முகம்சுளிப்பார்கள். எனவே உங்கள் தெய்வத்துக்கு நீங்கள்தான் எல்லாம்” என்று கூறினார்.