கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.ஜி.பி. சீமந்த் குமார் சிங்கை விமர்சனம் செய்ததற்காக தன்னை இட மாற்றம் செய்வதாக மிரட்டல் விடுப்பதாக அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
பெங்களூர் நகர்ப்புற மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது, நில தகராறு தொடர்பாக சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக, மாவட்ட ஆணைய நீதிமன்ற ஒப்பந்த ஊழியர் சேத்தன் மற்றும் உதவி தாசில்தார் மகேஷ் ஆகியோர், 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மாவட்ட ஆணையர் மஞ்சுநாத் கேட்டுக் கொண்டதால் தாங்கள் அவருக்காக லஞ்சம் வாங்கியதாக இருவரும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி சந்தேஷ், கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தில் ஊறிப் போயுள்ளதாகவும், லஞ்சம் வாங்கும் சிறப்பு மையமாக செயல்படுவதாகவும், இதற்கு தலைவராக கறைபடிந்த நபர் இருப்பது அதைவிட வெட்கக்கேடானது என்றும் காட்டமாக கூறினார்.
நீதிபதி சந்தேஷின் இந்த கருத்தை தொடர்ந்து மாவட்ட ஆணையர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மஞ்சுநாத் இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதை அடுத்து, மஞ்சுநாத் தொடர்ந்த ஜாமின் வழக்கை விசாரித்த நீதிபதி சந்தேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை குறித்தும் அதன் தலைவர் குறித்தும் தான் கூறிய கருத்துக்காக தன்னை இட மாறுதல் செய்யப்போவதாக சக நீதிபதி என்னிடம் கூறினார். என்னை மிரட்டி பணிய வைக்கப் பார்க்கிறார்கள்; அது என்னிடம் நடக்காது. நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். என்னிடம் எந்த சொத்தும் இல்லை. என்மேல் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்காக நான் மேற்கொண்ட முயற்சியை கைவிட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் கூறினார். ஊழலை அம்பலப்படுத்தியதற்காக மிரட்டல் விடுக்கின்றனர் என்று, நீதிமன்றத்தில் நீதிபதி சந்தேஷ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகாவில் பாஜகவின் ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்தியதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்ட அமைப்பையும் பாஜக புல்டோசரால் இடித்து தள்ளுகிறது. நாம் ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்பவர்களுடன் அச்சமின்றி உறுதுணையாக நிற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.