விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சித்தாளம்புத்தூரைச் சேர்ந்தவர் வெயில் செல்வம் (36). தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். வெயில் செல்வத்தின் தலைமையின் கீழ் மேலும் 14 பேர் ஒப்பந்த ஊழியர்களாகப் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மின் பராமரிப்பு பணி செய்வதற்காக வெயில் செல்வமும் அவர் குழுவினரும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வெயில் செல்வம் உட்பட 15 பேரும் இன்று காலை விருதுநகர் மின்பிரிவு கோட்டத்துக்கு வந்தனர். தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் 5 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் வெயில் செல்வம் குழுவினர் 15 பேர் உட்பட மொத்தம் 20 பேர் விருதுநகர்-சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம்மாள் நகர் சர்வீஸ் ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் மின்பாதை பராமரிப்பு பணி மேற்கொண்டு வந்தனர்.
முன்னெச்சரிக்கைக்காக, டிரான்ஸ்பார்மர்களில் மின்சப்ளையை நிறுத்திய ஊழியர்கள், தலா 4 பேர் ஒரு குழுவாகப் பிரிந்து பணி செய்தனர். மின் கம்பிகளில் பழுதடைந்த பாகங்களை மாற்றி புதியக்கருவிகள் பொருத்தும் பணியில் இருவரும், புதுப்பிக்கப்பட்ட மின்பாதை கம்பிகளை பொருத்துவதற்காக மின்கம்பத்தின் மேலே இருவரும் என அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய வேலையில், மின்கம்பியில் பழுதடைந்த பாகங்களை மாற்றும் பணியை வெயில் செல்வமும், கிருஷ்ணன்கோயிலை அடுத்த குன்னூரைச் சேர்ந்த முத்துராஜூம் செய்து வந்தனர். பகல் 11:30 மணியளவில், அவர்கள் வேலை செய்துக்கொண்டிருந்த மின்தடத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்து வெயில் செல்வம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். முத்துராஜ் தூக்கிவீசப்பட்டு உயிருக்குப் போராடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு… முத்துராஜை மீட்டு மருத்துவமனைக்குச் கொண்டுசென்றனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த வெயில் செல்வத்தின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீஸார், சக ஊழியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பேசியவர்கள், “டிரான்ஸ்பார்மர்ல மின்சாரத்தை நிறுத்திட்டுத்தான் நாங்க வேலையை ஆரம்பிச்சோம். மின்வழித்தடத்துல மோசமா இருக்கிற கருவிகளை வெயில் செல்வமும், முத்துராஜூம்தான் கீழிருந்து கையால பிரிச்சு மாத்திக்கிட்டு இருந்தாங்க. அப்போ திடீர்னு மின்சாரம் அவங்க மேல பாய்ஞ்சுடுச்சு. திடீர்னு மின்சாரம் எப்படி அந்த வழித்தடத்துல வந்துச்சுன்னு எங்க யாருக்குமே புரியல. நாங்க வேலை செய்யறது தெரியாம யாராவது டிரான்ஸ்பார்மர்ல சப்ளை ‘ஆன்’ செஞ்சிருக்கணும். அப்படி இல்லன்னா குறிப்பிட்ட அந்த டிரான்ஸ்பார்மர்ல கனெக்ட் ஆகுற மாதிரி பக்கத்துல எதாவது பெரிய ஜெனரேட்டர் ஸ்டார்ட் செஞ்சிருக்கணும். அப்படி இருந்தா மட்டும்தான் ரிவர்ஸ் சப்ளையாகி இந்த மின் வழித்தடத்தில் மின்சாரம் பாய்ஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. ஆனால் இதுல எந்த இடத்தில தப்பு நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரியல.
ஒப்பந்த ஊழியர்களில் ஒருத்தர் இறந்து போயிட்டாரு. இன்னொருத்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில இருக்காருன்னு தெரிஞ்சும் மின்வாரியத்தில் இருந்து இதுவரைக்கும் எந்த அதிகாரிகளும் வந்து ஆறுதல் சொல்ல வரல. உயிரிழப்பு ஏற்பட்டதற்கு அதிகாரிகள் கவனம் குறைவும் ஒரு காரணம் தான். அதனால இதுக்கு காரணமானவங்க மேல அரசு சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கணும். இறந்துபோன வெயில் செல்வத்துக்கு, கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கு. மின்சார வாரியத்துக்கு வெயில் செல்வம்தான் சொந்தப் பணத்தைப்போட்டு வேலை பார்த்து குடுத்ததுக்காக செட்டில்மென்ட் தொகை இப்பவரைக்கும் அதிகாரிகங்க தரல. எனவே, அவருக்கு கிடைக்க வேண்டிய வேலை செட்டில்மென்ட் தொகை, அவர் உயிரிழந்ததற்கான இழப்பீடு தொகை, அரசு உதவி இதெல்லாம் ஏற்பாடு செஞ்சி குடுக்க நடவடிக்கை எடுக்கனும்” என்று கூறியிருக்கிறார்கள்.
மின் விபத்தில் வெயில் செல்வம் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்தும், காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள், அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு அமைந்துள்ள விருதுநகர்-மல்லாங்கிணறு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.